குருவித்துறை குருபகவான் கோவில் குரு பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை தொடங்கியது.

குருபெயர்ச்சி விழா;

Update:2021-11-12 02:47 IST
சோழவந்தான், 
குருவித்துறை குருபகவான் கோவில் குரு பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை  தொடங்கியது. 
குருபெயர்ச்சி விழா
சோழவந்தான் அருகே குருவித்துறை சித்திரரதவல்லப பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. பெருமாளை நோக்கி தவக்கோலத்தில் குருபகவான் சுயம்புவாக வீற்றிருக்கிறார். அருகில் சக்கரத்தாழ்வார் உள்ளார். இங்கு ஒவ்வொரு குருபெயர்ச்சி விழாவும் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு குருபெயர்ச்சி விழாவையொட்டி நேற்று காலை ஸ்ரீதர் பட்டர், ரெங்கநாத பட்டர், சடகோப பட்டர், ஸ்ரீபாலாஜி பட்டர், ராஜா பட்டர் உள்பட 21 பேர் லட்சார்ச்சனை நடத்தினர். லட்சார்ச்சனையுடன் குருபெயர்ச்சி விழா தொடங்கியது. 
விழாவை வெங்கடேசன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இந்து சமய அறநிலையத்துறை உதவிஆணையர் விஜயன், செயல்அலுவலர் சுரேஷ்கண்ணன், ஆய்வாளர் மதுசூதனன்ராயர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவை முன்னிட்டு வெளியூரில் இருந்து பக்தர்கள் வருகை புரிந்து குருபகவானை தரிசித்தனர். இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் பசும்பொன்மாறன், ரேகா வீரபாண்டி, இளைஞரணி ஒன்றிய அமைப்பாளர் வெற்றிச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
21 அபிஷேகம்
கர்நாடக கூடுதல் டி.ஜி.பி. ஜெயராமன் லட்சார்ச்சனை விழாவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். இவரை முன்னாள் ஊராட்சி தலைவர் கர்ணன், தொழில் அதிபர் எம்.கே.எம்.ராஜா, மணிவேல் உட்பட பலர் வரவேற்றனர். சமயநல்லூர் துணைசூப்பிரண்டு பாலசுந்தர், சோழவந்தான் இன்ஸ்பெக்டர் சிவபாலன், காடுபட்டி சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் உள்பட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.குருவித்துறை ஊராட்சி சார்பாக கூடுதல் தெருவிளக்கு, கூடுதல் குடிநீர் வசதி, முழு சுகாதார பணி செய்யப்பட்டது. மன்னாடிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் விழிப்புணர்வு முகாம் நடந்தது. இன்று லட்சார்ச்சனை தொடர்ந்து நடைபெறும். இரவு நிறைவுபெற்று நாளை பகல் 3 மணி அளவில் பரிகார மகா யாகம் நடைபெறும். 6.10 மணி அளவில் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு குரு பெயர்ச்சி ஆவதால் குருபகவானுக்கு 21 அபிஷேகம் நடைபெறும். 
ஏற்பாடு
பின்னர் பரிகார யாகத்தில் பூஜை செய்யப்பட்ட புனித நீரால் மகா அபிஷேகம் நடைபெறும். இதையொட்டி கோவில் நிர்வாகம் சிறப்பான ஏற்பாடு செய்துள்ளனர். காவல்துறை, சுகாதாரத் துறை, வருவாய் துறை, தீயணைப்புத் துறை, அரசு போக்குவரத்து துறை மற்றும் அறநிலையத்துறை இணைந்து கொரோனா தொற்று நோய் பரவல் காரணமாக அரசு உத்தரவின்படி அனைத்து விழிப்புணர்வு ஏற்பாடுகளும் செய்துள்ளனர். வரக்கூடிய பக்தர்கள் முககவசம் அணிந்து வரவேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்