அறிவுத்திறன் குறைந்தவர்களின் நலன்கருதி சட்டத்தில் திருத்தம் செய்யவேண்டும்

அறிவுத்திறன் குறைந்தவர்களின் நலன்கருதி சட்டத்தில் திருத்தம் செய்யவேண்டும் என்று கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.;

Update:2021-11-14 01:39 IST
மதுரை, 
அறிவுத்திறன் குறைந்தவர்களின் நலன்கருதி சட்டத்தில் திருத்தம் செய்யவேண்டும் என்று கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.
கருத்தரங்கு
மதுரையில் லேடி டோக் கல்லூரி, அனுகிரகஹா சமூக அறிவியல் கல்லூரி, பெத்சான் சிறப்பு பள்ளி இணைந்து அறிவுசார் குறைபாடு உடையவர்களுக்கான கருத்தரங்கத்தை நடத்தின.
பட்டிமன்ற பேச்சாளர் ராஜா, ஸ்டீபன் முத்து ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று, விழுதுகள் புத்தகத்தை வெளியிட்டனர். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவிச்சந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டு லில்லிகிரேஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
சிறப்பு பேச்சாளராக ஐகோர்ட்டு வக்கீல் கு.சாமித்துரை பங்கேற்று பேசியதாவது:-
நம்மில் 7-ல் ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அறிவுத்திறன் குறைந்த வர்களுக்கு அரசியலமைப்பு சட்டத்தின்படி ஓட்டுரிமை கிடையாது. இந்திய ஒப்பந்த சட்டத்தின்படி எந்தஒரு ஒப்பந்தத்திலும் அவர்கள் கையெழுத்திட முடியாது.
மீறி கையெழுத்திட்டு இருந்தால் அது செல்லாது. திருமணமும் செல்லாது. மீறி நடந்தால் சட்டப்படி இது விவாகரத்து பெற வழியுண்டு. அனைத்து மத திருமண சட்டத்திலும் இந்த நடைமுறை உள்ளது.
முன்னுரிமை
சமுதாயத்தில் நல்ல மனநிலையில் உள்ளவர்கள் திருமணம் செய்தாலே, பல்வேறு காரணங்களால் ஏராளமான விவாகரத்து வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. ஆனால் அறிவுத்திறன் குறைந்தவர்கள் திருமணம் செய்வதற்கான சூழ்நிலைகளை நாம் ஏற்படுத்தி தரலாம். அதற்கு நல்ல பயிற்சிகளையும், குடும்பச்சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும். வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் அறிவுத்திறன் குறைந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இவர்களின் நலனுக்காக ஏராளமான சட்டங்கள் உள்ளன. அவர்களின் உணர்வு களுக்கு மதிப்பளிக்கும் வகையில் திருமணம் உள்ளிட்டவற்றிற்காக சட்டத்தில் சில மாற்றமும் கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் பாலியல் வன்முறைகளில் இருந்து அறிவுத்திறன் குறைந்தவர்களை காத்தல் உள்ளிட்டவை பற்றி அரசு ராஜாஜி ஆஸ்பத்திரி டாக்டர்கள் ஜோதிசுந்தரம், சுரேஷ்குமார், பெத்சான் பள்ளி முதல்வர் ரவிக்குமார் ஆகியோர் பேசினார்கள்.

மேலும் செய்திகள்