இலங்கை ரவுடி அங்கொடா லக்காவின் கூட்டாளிகள் 2 பேர் கைது
இலங்கை ரவுடி அங்கொடா லக்காவின் கூட்டாளிகள் 2 பேர் கைது;
கோவை
கோவையில் மர்மமான முறையில் உயிரிழந்த இலங்கை ரவுடி அங்கொடா லக்காவின் கூட்டாளிகள் 2 பேர் கைது செய்யப் பட்டனர்.
இலங்கை ரவுடி
இலங்கை ரவுடி அங்கொடா லக்கா (வயது 35). இவர் மீது இலங்கையில் பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளன. இவர் தனது இலங்கை குடியுரிமையை மறைத்து, கோவையில் தங்கி இருப்பதாக கூறி மேற்கு வங்காளத்தை சேர்ந்த பிரதீப்சிங் என்ற பெயரில் ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை தயாரித்தார்.
இந்த நிலையில் அவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கோவை யில் மர்மமான முறையில் இறந்தார். அவருடைய உடல் கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்படடது. பின்னர் மதுரை கொண்டு சென்று மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
கூட்டாளிகளுக்கு வலைவீச்சு
இது குறித்து கோவை பீளமேடு போலீசார் விசாரித்து வந்தனர். பின்னர் அந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. அதன்படி சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி மதுரையை சேர்ந்த வக்கீல் சிவகாமி சுந்தரி, ஈரோட்டை சேர்ந்த தியானேஸ்வரன் மற்றும் அங்கொடா லக்காவின் காதலி அம்மானிதான்ஷி ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
மேலும் அங்கொடா லக்கா தமிழகத்தில் தங்க அடைக்கலம் கொடுத்த அவரது கூட்டாளிகளை சி.பி.சி.ஐ.டி. போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
2 பேர் கைது
இந்த நிலையில் கூட்டாளிகள் 2 பேர் பெங்களூருவில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் தலைமையில் தனிப்படையினர் பெங்களூரு விரைந்தனர்.
பின்னர் அங்குள்ள குள்ளப்பா சர்க்கிள் பகுதியில் பதுங்கியிருந்த அங்கொடா லக்காவின் கூட்டாளிகளான இலங்கை அதுர கிரியாவை சேர்ந்த நளின் சதுரங்கா என்கிற சனுக்கா தனநாயகா (38), பெங்களூரு சுப்பையாபாளையத்தை கோபாலகிருஷ்ணன் (46) ஆகியோரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
சிறையில் அடைப்பு
தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கோவைக்கு அழைத்து வந்து, தலைமை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு நீதிபதி சஞ்சீவி பாஸ்கர் முன்பு ஆஜர்படுத்தினார்கள். அவர்கள் 2 பேரையும் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து 2 பேரையும் போலீசார் ஈரோடு மாவட்டம் பெருந்துறை கிளை சிறையில் அடைத்தனர்.