ஈரோடு அடுத்த வெள்ளோட்டில் 80 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.12 கோடி மதிப்புள்ள கோவில் நிலம் மீட்பு- இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை

ஈரோட்டை அடுத்த வெள்ளோட்டில் 80 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.12 கோடி மதிப்புள்ள கோவில் நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.

Update: 2021-11-15 21:28 GMT
சென்னிமலை
ஈரோட்டை அடுத்த வெள்ளோட்டில் 80 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.12 கோடி மதிப்புள்ள கோவில் நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர். 
பெருமாள் கோவில்
சென்னிமலை ஊராட்சி ஒன்றியம் வெள்ளோட்டில் பழமையான ஆதி நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்கு பின்புறம் மற்றும் பெருந்துறை ஆர்.எஸ் செல்லும் சாலையை ஒட்டிய பகுதியில் 2.43 ஏக்கர் கோவில் நிலம் உள்ளது. ரூ.12 கோடி மதிப்பிலான இந்த நிலம் கடந்த 80 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்ததாக தெரிகிறது. கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்களை அளவீடு செய்து அவற்றை மீட்க வேண்டும் என ஏற்கனவே ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.
அதன் பின்னர் தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தமிழகம் முழுவதும் உள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் நிலங்களை மீட்பதில் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். அதேபோல் வெள்ளோடு ஆதிநாராயண பெருமாள் கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க வேண்டும் என்று வெள்ளோடு பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இடித்து அகற்றம்
இந்தநிலையில் தமிழக அரசின் உத்தரவுப்படி இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் சந்திரமோகன், ஆணையாளர் குமரகுருபரன் ஆகியோர் வெள்ளோடு ஆதிநாராயண பெருமாள் கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். இதுகுறித்து ஏற்கனவே ஆக்கிரமிப்பாளர்களுக்கு அறிவிப்பு கொடுக்கப்பட்டிருந்தது.
அதன்படி நேற்று காலை 9.30 மணி அளவில் ஈரோடு மண்டல இணை ஆணையர் கோ.மங்கையர்கரசி அறிவுறுத்தலின்படி ஈரோடு இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் எம்.அன்னக்கொடி தலைமையில் வருவாய் துறையினர், பொதுமக்கள் முன்னிலையில் 2 பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் மாலை 6 மணி வரை ஆக்கிரமிப்பில் இருந்த வீடுகள், கடைகள் ஆகியவற்றை இடித்து அகற்றினார்கள்.
பரபரப்பு
அப்போது சென்னி மலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் டி.காயத்ரி இளங்கோ, சென்னிமலை வடக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் ப.செங்கோட்டையன், ஊராட்சி தலைவர்கள் வி.பி.இளங்கோ (குமாரவலசு), வாசுகி ஜெகநாதன் (வடமுகம் வெள்ளோடு), குமார் (குட்டப்பாளையம்), தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர், ஒன்றிய கவுன்சிலர் பேபி முருகேசன், கோவில் செயல் அலுவலர்கள் ஆர்.சுகுமார், எம்.அருள்குமார் (ஈரோடு), மு.ரமணி காந்தன் (சென்னிமலை) மற்றும் அறநிலையத்துறை பணியாளர்கள் உடனிருந்தனர். ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களில் ரோவர் கருவி மூலம் அளவீடு செய்யப்பட்டு அங்கு கோவிலுக்கு சொந்தமான இடம் என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. 
ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கூடினார்கள். 80 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பில் இருந்த கோவில் நிலம் மீட்கப்பட்டது அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.

மேலும் செய்திகள்