வளர்ச்சி திட்ட பணிகளுக்காக ஈரோட்டில் தோண்டப்பட்ட ரோடுகளை உடனே சீரமைக்கவேண்டும்- கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு
ஈரோட்டில் வளர்ச்சி திட்ட பணிகளுக்காக தோண்டப்பட்ட ரோடுகளை உடனே சீரமைக்கவேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுக்கப்பட்டது.;
ஈரோடு
ஈரோட்டில் வளர்ச்சி திட்ட பணிகளுக்காக தோண்டப்பட்ட ரோடுகளை உடனே சீரமைக்கவேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுக்கப்பட்டது.
மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசன் முன்னிலை வகித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர். சென்னிமலை வசந்தம் நகரை சேர்ந்த மணிகண்டன், தனது மகன்களை பள்ளி சீருடையில் அழைத்து வந்து கலெக்டரிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறி இருந்ததாவது:-
என்னுடன் சேர்ந்து மொத்தம் 520 பேர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெரும்பள்ளம் ஓடை பகுதியில் குடியிருந்தோம். நீர்வழி புறம்போக்கு ஆக்கிரமிப்பு காரணத்தால் எங்களது வீடுகள் அகற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து எங்களுக்கு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டன.
பஸ் வசதி
என்னுடன் சேர்ந்து 50 குடும்பத்தினருக்கு சென்னிமலை வசந்தம் நகரில் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டிக்கொடுக்கப்பட்டது. நாங்கள் பெரும்பாலும் கட்டிட தொழிலாளிகள் தான். எங்கள் குழந்தைகள் 20 பேர் 6 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பள்ளிக்கூடத்துக்கு தினமும் நடந்து சென்று படித்து வருகிறார்கள்.
நாங்கள் காலையில் வேலைக்கு சென்றால் இரவில் தான் வீட்டுக்கு வருவோம். இதனால் எங்கள் குழந்தைகளை பள்ளிக்கூடத்திற்கு அழைத்து செல்ல முடியாத சூழ்நிலையில் உள்ளோம். எனவே மாணவ -மாணவிகள் பள்ளிக்கூடத்திற்கு சென்று வர பஸ் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறி இருந்தனர்.
ஆக்கிரமிப்பு
ஈரோடு முத்தம்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த சுந்தரி கொடுத்திருந்த மனுவில், ‘எங்களுக்கு பவானி தொட்டியபாளையம் பகுதியில் நிலமும், வீடும் உள்ளது. இந்த வீடு, எனது கணவரின் பணி ஓய்வு பணம் மற்றும் வங்கியில் பெறப்பட்ட கடன் மூலம் கட்டப்பட்டது. கடந்த சில ஆண்டாக எனது கணவர் செல்லமுத்துவுக்கு உடல் நிலை சரி இல்லாததால், சிகிச்சைக்காக ஈரோட்டில் வசித்து வந்தோம். இதற்கிடையில் எங்கள் நிலம் மற்றும் வீட்டை சிலர் அபகரித்து கொண்டனர். எனவே அதை மீட்டுத்தர வேண்டும்’ என்று கூறி இருந்தார்.
பவானிசாகர் அருகே உள்ள தொப்பம்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்திருந்த மனுவில், ‘எங்கள் பகுதியில் கிறிஸ்தவர்கள் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பிரார்த்தனை கூட்டம் என்ற பெயரில் தினமும் ஒலிபெருக்கி மூலம் அதிக சத்தம் எழுப்புவதால் மிகவும் சிரமமாக உள்ளது. எனவே இதனை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.
சமூக பரப்புரையாளர்கள்
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சமூக பரப்புரையாளராக பணியாற்றி வந்தவர்கள் கலெக்டரிடம் கொடுத்திருந்த கோரிக்கை மனுவில் கூறி இருந்ததாவது:-
ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள 42 பேரூராட்சிகளில் 105 பேர் சமூக பரப்புரையாளராக பணியாற்றி வருகிறோம். கடந்த 4 மாதங்களாக எங்களுக்கு மாத ஊதியம் வழங்காமல் எங்களை பணி நிறுத்தம் செய்து விட்டனர். தற்போது எங்களது பணிக்கு வேறு நபர்களை நியமனம் செய்துள்ளனர். இதனால் நாங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறோம். எனவே எங்களுக்கு மீண்டும் பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.
241 மனுக்கள்
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மாவட்ட பொதுச்செயலாளர் ரபீக் என்பவர் கொடுத்திருந்த மனுவில், ‘ஈரோடு மாநகர பகுதியில் பாதாள சாக்கடை பணிக்காகவும், ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டப்பணி மற்றும் பாதாள மின்கேபிள் திட்ட பணிக்காவும் தோண்டப்பட்ட ரோடுகள் செப்பனிடப்படாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே மாநகர் பகுதியில் குண்டும், குழியுமான ரோட்டை உடனடியாக சீரமைக்க வேண்டும்’ என்று கூறி இருந்தார்.
இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்தவர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். மொத்தம் 241 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதை அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி உத்தரவிட்டார்.