தற்கொலை செய்த மாணவியின் வீடு உள்பட 4 இடங்களில் போலீசார் சோதனை

தற்கொலை செய்த மாணவியின் வீடு உள்பட 4 இடங்களில் போலீசார் சோதனை;

Update:2021-11-16 20:52 IST
தற்கொலை செய்த மாணவியின் வீடு உள்பட 4 இடங்களில் போலீசார் சோதனை
கோவை

பாலியல் தொல்லையால் தற்கொலை செய்த பள்ளி மாணவியின் வீடு, கைதான ஆசிரியர் வீடு உள்பட 4 இடங்களில் தனிப்படை போலீசார் சோதனை நடத்தி 2 செல்போன்கள், மடிக்கணினி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

தனிப்படை அமைப்பு

கோவையில் பாலியல் தொல்லை காரணமாக பிளஸ்- 2 மாணவி  தற்கொலை செய்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி, அந்த மாணவி முன்பு படித்த ஆர்.எஸ்.புரம் சின்மயா வித்யலயா பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி பாலியல் தொல்லை கொடுத்ததால் மாணவி தற்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி, மாணவி அளித்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காத பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் பள்ளி மாணவியின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த 4 தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள், மாணவிக்கு வேறு யாராவது பாலியல் தொல்லை கொடுத்தார்களா?, தற்கொலைக்கு முன்பு யார், யாரிடம் அவர் செல்போனில் பேசினார் என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புத்தகம், நோட்டுகள்

தற்கொலை செய்த மாணவி எழுதியதாக கூறப்படும் கடிதத்தில் உள்ள கையெழுத்தும், பழைய பள்ளியில் மாற்று சான்றிதழ் கேட்டு மாணவி எழுதி கொடுத்த விண்ணப்பத்தில் உள்ள கையெழுத்தையும் போலீசார் ஒப்பீட்டு பார்த்தனர். இதில் மாணவியின் கையெழுத்து சரியாக பொருந்தவில்லை என்று கூறப்படுகிறது. எனவே மாணவி தனது நோட்டுகளில் எழுதிய கையெழுத்துடன் ஒப்பீடு செய்ய உள்ளனர்.

இதையடுத்து கோவை மேற்கு பகுதி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் நேற்று அந்த பெண்ணின் வீட்டில் சோதனை நடத்தி மாணவியின் புத்தகங்கள் மற்றும் நோட்டுகள் உள்ளிட்டவற்றை போலீசார் எடுத்து சென்றனர். மேலும் மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடமும் விசாரணை நடத்தினர்.

செல்போன் கைப்பற்றப்பட்டது

இதையடுத்து கைதான ஆசிரியர் வீடு, மாணவியின் ஆண் நண்பர் வீடு, பள்ளியில் உள்ள முதல்வரின் அறை ஆகிய இடங்களிலும் போலீசார் சோதனை நடத்தினர். இதில், பள்ளி முதல்வரின் அறையில் இருந்து மாணவியின் வருகை பதிவேடு, மதிப்பெண் அடங்கிய ஆவணங்கள், ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி வீடு மற்றும் மாணவியின் ஆண் நண்பர் வீட்டில் இருந்து தலா ஒரு செல்போன்களை போலீசார் கைப்பற்றினர்.

செல்போன்கள், மடிக்கணினி பறிமுதல்

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

மாணவியின் தற்கொலை தொடர்பாக 4 தனிப்படை விசாரித்து வருகிறது. மாணவியின் வீட்டில் சோதனை நடத்தி புத்தகம், நோட்டுகள், மாணவி பயன்படுத்திய மடிக்கணினி கைப்பற்றப்பட்டு உள்ளது.
மாணவி எழுதிய கடிதத்தில் 3 பேரின் பெயர் உள்ளது. அதில் ஒருவர் பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி, மீதம் உள்ள 2 பேர் யார் என்பது தற்போது அடையாளம் காணப்பட்டு உள்ளது. 

அவர்களிடம் தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியின் நோட்டில் உள்ள கையெழுத்தும், கடிதத்தில் உள்ள கையெழுத்தும் ஒன்று தானான என்பதை கண்டறிய நிபுணர்களின் உதவியை நாடி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தற்கொலை செய்த மாணவியின் வீட்டிற்கு நேற்று சென்று, உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.



பள்ளி கல்வித்துறை விசாரணை நிறைவு

பள்ளி மாணவி தற்கொலை தொடர்பாக மாவட்ட கல்வித்துறை உரிய விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும்படி பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, ஆர்.எஸ்.புரம் சின்மயா வித்யாலயா பள்ளியில் படிக்கும் மாணவிகள், அவர்களின் பெற்றோர், சக ஆசிரியர்கள், தற்போதைய பள்ளி முதல்வர், பள்ளி நிர்வாகம், கைதான ஆசிரியரின் மனைவி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினார். 

இந்த விசாரணை நிறைவு பெற்றதால் அறிக்கை தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. அது சென்னையில் உள்ள மாநில பள்ளி கல்வித்துறையிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே மாணவி தற்கொலை தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கும் படி பள்ளி நிர்வாகத்திற்கு நோட்டீஸ் வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்