ஈரோட்டில் கூட்டுறவு வார விழா: 1,554 பேருக்கு ரூ.21½ கோடி நலத்திட்ட உதவிகள்- அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்

ஈரோட்டில் நடந்த கூட்டுறவு வார விழாவில் 1,554 பேருக்கு ரூ.21½ கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்.;

Update:2021-11-17 02:11 IST
ஈரோடு
ஈரோட்டில் நடந்த கூட்டுறவு வார விழாவில் 1,554 பேருக்கு ரூ.21½ கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார். 
நலத்திட்ட உதவிகள்
கூட்டுறவு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. “கூட்டுறவு அமைப்புகளுக்கான அலுவல் நடவடிக்கைகளை எளிமைப்படுத்துதல்” என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான கூட்டுறவு வார விழா ஈரோடு செங்கோடம்பள்ளத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். விழாவில் தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் சுமார் 85 மேம்பாட்டு பணிகள் செய்யப்பட உள்ளது. மக்களின் அடிப்படை பிரச்சினைகள் அனைத்தும் பூர்த்தி செய்து கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கூட்டுறவுத்துறையின் சார்பில் ஈரோடு மண்டலத்தில் வேளாண்மை உற்பத்தியை அதிகரிக்க தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக விவசாயிகளுக்கு ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் வரை வட்டியில்லா பயிர் கடன் வழங்கப்பட்டு உள்ளது.
பயிர் கடன்
2021-2022 ஆம் ஆண்டில் இதுவரை 22 ஆயிரத்து 424 விவசாயிகளுக்கு ரூ.224 கோடியே 50 லட்சம் பயிர் கடன் வழங்கப்பட்டு உள்ளது. மேலும், விவசாயிகள் பெற்ற பயிர் கடனை தவணை தவறாது திருப்பி செலுத்துவதற்கு 7 சதவீத வட்டி தொகையினை முழுவதும் அரசு ஏற்று, வட்டியில்லா விவசாய பயிர் கடன் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு ஆதாரத்தின் அடிப்படையில் ரூ.3 லட்சம் வரை பயிர்க்கடன் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகளின் துயர் துடைக்கும் திட்டமான பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டில் ஈரோடு மண்டலத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக வழங்கப்பட்டு கடந்த ஜனவரி மாதம் 31-ந் தேதி வரை நிலுவையில் இருந்த பயிர்க்கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி கூறினார். இதில் 1,554 பேருக்கு ரூ.21 கோடியே 53 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
விருதுகள்
விழாவில் மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட 38 கூட்டுறவு சங்கங்களுக்கு விருதுகளை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார். முன்னதாக கூட்டுறவு கொடியை அவர் ஏற்றி வைத்து கூட்டுறவு துறை சார்பில் அமைக்கப்பட்டு இருந்த கண்காட்சியை பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் நவமணி கந்தசாமி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய தலைவர் காளியப்பன், ஆவின் பொது மேலாளர் பாலசுப்பிரமணியம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரேணுகா, மேலாண்மை இயக்குனர் செந்தமிழ்ச்செல்வி, துணைப்பதிவாளர் ராமநாதன், மேலாண்மை இயக்குனர் (பொறுப்பு) பாலாஜி, கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் கந்தராஜா, கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் நர்மதா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்