திருவாரூர் மாவட்டத்தில் பலத்த மழை

திருவாரூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

Update: 2021-11-17 16:14 GMT
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. 
திருவாரூர்
திருவாரூர் மாவட்டத்தில் சற்று மழை ஓய்ந்தது. இந்தநிலையில் நேற்று மீண்டும் திருவாரூரில் பலத்த மழை பெய்தது. இந்த மழையினால் சம்பா, தாளடி வயல்களில் தண்ணீர் வடிவதில் சிக்கல் நிலவி வருகிறது. இதனால் விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர். எனவே சம்பா, தாளடி பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கினால் தான் இதுவரை சாகுபடிக்கு செய்த செலவினை ஈடு கட்ட முடியும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- 
திருத்துறைப்பூண்டி-73, திருவாரூர்-22, பாண்டவையாறு தலைப்பு-14, முத்துப்பேட்டை, நீடாமங்கலம், மன்னார்குடி-2, நன்னிலம் மற்றும் வலங்கைமான்-1. 
மன்னார்குடி
காவிரி டெல்டா பகுதியில் கடந்த வாரம் பெய்த பலத்த மழையினால் சம்பா பயிர்கள் மழை நீரில் மூழ்கின. மழைவிட்டு தண்ணீர் வடிந்து கொண்டிருக்கும் நிலையில் நேற்று மீண்டும் மன்னார்குடி பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் நகரில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. சாலைகளில் மழைதண்ணீர்  பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 
கூத்தாநல்லூர்
கூத்தாநல்லூர் பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு பெய்த கனமழையால் குறுவை அறுவடை பணிகள் மற்றும் சம்பா தாளடி- நடவு பணிகள் பாதிக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி, பொதக்குடி, பூதமங்கலம், தண்ணீர்குன்னம், வடபாதிமங்கலம், ஓகைப்பேரையூர், ராமநாதபுரம், திருராமேஸ்வரம், கோரையாறு, ஓவர்ச்சேரி, குடிதாங்கிச்சேரி, குலமாணிக்கம், நாகங்குடி, பழையனூர், அதங்குடி, வெள்ளக்குடி, வாழச்சேரி, மரக்கடை, விழல்கோட்டகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளிலும், வயல்களிலும், சாலைகளிலும் மழை தண்ணீர் தேங்கி நின்றது.
வலங்கைமான் 
வலங்ைகமான் பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. இதேபோல் ஆலங்குடி, கோவிந்தகுடி, ஆவூர், நல்லூர், கொட்டையூர், அரித்துவாரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. மேலும் பள்ளி, கல்லூரி  மாணவ-மாணவிகள் மழையில் நனைந்தவாறு வீட்டிற்கு சென்றனர். இந்த மழையால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
திருமக்கோட்டை, நீடாமங்கலம்
திருமக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது.  இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 
நீடாமங்கலம் பகுதியில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் நகரில் பல தெருக்களில் சாக்கடை கழிவு நீரும், மழைநீரும் கலந்து ஓடியது. இதனால் துர்நாற்றம் வீசியது. தொடர் மழை காரணமாக நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதை வடியவைக்க விவசாயிகள் நடவடிக்கை எடுத்து வந்தனர். மீண்டும் மழை பெய்வது விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது. மழையால் ஏற்படும் சுகாதார கேடுகளை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்