விழுப்புரத்தில் வாலிபர் டிரைவரை தாக்கி கார் கடத்தல் அரசு ஆஸ்பத்திரி பெண் ஊழியர் உள்பட 3 பேர் மீது வழக்கு

விழுப்புரத்தில் வாலிபர் டிரைவரை வழிமறித்து தாக்கி காரை கடத்தி சென்றது தொடர்பாக அரசு ஆஸ்பத்திரி பெண் ஊழியர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்

Update: 2021-11-17 16:19 GMT

விழுப்புரம்

பணியிட மாறுதல்

விக்கிரவாண்டி அருகே உள்ள வாக்கூரை சேர்ந்தவர் சிலம்பரசன்(வயது 33). விழுப்புரம் முத்தோப்பு பகுதியில் வசித்து வரும் லதா என்பவர் கடந்த 2017-ம் ஆண்டு ராதாபுரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்தபோது அவரது விருப்பத்திற்கேற்ப சிலம்பரசன் ரூ.1 லட்சத்தை பெற்றுக்கொண்டு அவரது சொந்த ஊரான திருப்பத்தூர் மாவட்டத்திற்கு பணியிட மாறுதல் வாங்கிக்கொடுத்துள்ளார். அதன் பிறகு கடந்த 2020-ல் லதா பதவி உயர்வு பெற்று முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் பணியில் சேர்ந்தார். தற்போது அவர் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிலம்பரசனை லதா சந்தித்துள்ளார். அப்போது லதா, தான் கொடுத்த ரூ.1 லட்சத்தை திருப்பித்தரும்படியும், இல்லையெனில் மீண்டும் திருப்பத்தூருக்கு பணியிட மாறுதல் வாங்கித்தரும்படியும் கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்கிடையே பிரச்சினை ஏற்பட்டது. இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் லதா கொடுத்த புகாரின்பேரில் விசாரணை நடந்து வருகிறது. 

கார் கடத்தல்

இந்த சூழலில் நேற்று முன்தினம் சிலம்பரசன், தனது உறவினர் ஒருவரை விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் சேர்ப்பதற்காக கார் டிரைவர் மோகன்ராஜ், உறவினர்கள் கருணாகரன், தயாநிதி ஆகியோருடன் காரில் புறப்பட்டார். பின்னர் கல்லூரியில் இருந்து வீடு திரும்பியபோது லதாவின் தூண்டுதலின்பேரில் விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் அந்த காரை விழுப்புரம் பெரியகாலனியை சேர்ந்த தீபன், சுரேந்தர் ஆகியோர் வழிமறித்து சிலம்பரசனையும், அவரது கார் டிரைவர் மோகன்ராஜையும் தாக்கியதோடு காரையும் கடத்திச்சென்று விட்டதாக கூறப்படுகிறது. காரின் மதிப்பு ரூ.5 லட்சமாகும்.  இதுகுறித்து சிலம்பரசன், விழுப்புரம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் தீபன், சுரேந்தர், லதா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே அந்த காரை போலீசார் மீட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்