பாதாள சாக்கடை உடைப்பு
ஈரோடு நல்லியம்பாளையம் ராகவேந்திரா நகரில் உள்ள பாதாள சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் வெளியேறி குண்டும், குழியுமான ரோட்டில் குளம் போல் தேங்கி காணப்படுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக பொதுமக்களால் செல்ல முடியவில்லை. கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவவும் வாய்ப்பு உள்ளது. மேலும் தெருவிளக்கும் இல்லை. உடனே பாதாள சாக்கடை உடைப்பை சரிசெய்ய வேண்டும். மேலும் அந்த பகுதியில் தெருவிளக்குகள் பொருத்தவும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், நல்லியம்பாளையம்
தேங்கி நிற்கும் கழிவுநீர்
ஈரோடு மாநகராட்சி 56-வது வார்டுக்கு உள்பட்டது மாரிமுத்து வீதி. இங்குள்ள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தேங்கும் கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகியுள்ளதால் நோய் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே சாக்கடை வடிகாலில் கழிவுநீர் தேங்காதபடி தங்கு தடையின்றி செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என்.அன்புதம்பி, கருங்கல்பாளையம்.
அடைப்பு சரிசெய்யப்படுமா?
ஈரோடு 46 புதூர் கஸ்பாபேட்டை ஊராட்சிக்கு உள்பட்டது முள்ளாம்பரப்பு நால்ரோடு. இதன் அருகே நாதகவுண்டன்பாளையம் செல்லும் வழியில் உள்ள சாக்கடை கழிவுநீர் பாதையில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி கிடப்பதால் பல்வேறு நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே கழிவுநீர் செல்லும் பாதை அடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாலை அமைக்க வேண்டும்
பெருந்துறை பழைய பஸ் நிலையத்தில் இருந்து போலீஸ் நிலையம் வரை ரோடு போடும் பணி தொடங்கியது. ஆனால் இந்த பணியை பாதியிலேயே நிறுத்திவிட்டார்கள். உடனே சாலை அமைக்கும் பணியை அதிகாரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், பெருந்துறை.
பஸ் நிலையம் செயல்பாட்டுக்கு வருமா?
ஈரோட்டை அடுத்த ஆனைக்கல்பாளையம் ரிங்ரோடு பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. இந்த பஸ் நிலையம் திறக்கப்பட்டும் எந்தவொரு பஸ்களும் வந்து செல்வதில்லை. பஸ் நிலையத்தில் உள்ள வணிக வளாக கட்டிடம் பயன்படுத்தப்படாமலேயே சிதிலமடைந்து காணப்படுகிறது. மேலும், மர்மநபர்கள் மது அருந்திவிட்டு காலி மதுபாட்டில்களை ஆங்காங்கே போட்டுவிட்டு செல்கிறார்கள். எனவே சமூக விரோத செயல்கள் நடப்பதை தடுக்க பஸ் நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், ஆனைக்கல்பாளையம்.
அப்புறப்படுத்த வேண்டும்
ஈரோடு திருநகர் காலனி ஆட்டோ நிறுத்தம் அருகில் பாதாள சாக்கடைக்காக குழி தோண்டினார்கள். அதன்பிறகு தோண்டப்பட்ட மண்ணை அப்படியே விட்டுவிட்டார்கள். இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. மேலும் காற்று வீசினால் புழுதி பறக்கிறது. மழை பெய்யும்போது சேறும், சகதியுமாகிறது. எனவே அந்த மண்ணை அப்புறப்படுத்த வேண்டும்.
சதீஸ் கமல், கிருஷ்ணம்பாளையம் காலனி.
ஓடையில் கொட்டப்படும் கழிவுகள்
ஈரோடு, காசிபாளையம் சென்னிமலை ரோட்டில் ஐ.டி.ஐ. பகுதியில் அமைந்துள்ள சூரம்பட்டி ஓடையில் தொடர்ந்து குப்பைகளையும், இறைச்சி கழிவுகளையும் கொட்டி வருகிறார்கள். இதனால் அந்த பகுதியில் சுற்றுப்புற சுகாதாரம் பாதிக்கப்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஓடையில் குப்பை, கழிவுகள் கொட்டுவதை தடுக்க வேண்டும்.
பொதுமக்கள், காசிபாளையம், ஈரோடு.
------------