செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்த 76 குழந்தைகளுக்கு ரூ.2¼ கோடி நிதி உதவி
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்த 76 குழந்தைகளுக்கு ரூ.2¼ கோடி நிதி உதவியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்.;
நிவாரண தொகை
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா நோய்தொற்றால் பெற்றோரை இழந்த 76 குழந்தைகளுக்கு ரூ.2 கோடியே 28 லட்சம் நிவாரண தொகை மற்றும் மேலக்கோட்டையூரில் உள்ள வருவாய்த்துறை மூலம் 46 பழங்குடி இருளர் குடும்பங்களுக்கு ரூ.4.6 கோடியில் இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது.
இந்த கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் தலைமை தாங்கினார். காஞ்சீபுரம் தொகுதி எம்.பி. செல்வம், செங்கல்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. வரலஷ்மி மதுசூதனன், பல்லாவரம் தொகுதி எம்.எல்.ஏ. கருணாநிதி, திருப்போரூர் தொகுதி எம்.எல்.ஏ.பாலாஜி முன்னிலை வகித்தனர்.
ரூ.2.28 கோடி
சிறப்பு விருந்தினராக ஊரகத் தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு கொரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கும், இருளர் இன குடும்பங்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
அப்போது அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது:-
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் தாய், தந்தையை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.10 லட்சம் நிவாரண உதவியும், பெற்றோர்களில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.3 லட்சமும் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்திருந்தார்.
அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் 76 குழந்தைகளுக்கு ரூ.2.28 கோடி மதிப்பீட்டில் நிதியுதவிகள் வழங்கப்பட்டது. இதுவரை 104 குழந்தைகளுக்கு ரூ.3 கோடியே 16 லட்சம் நிவாரண உதவியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், நிதியுதவி பெற்ற குழந்தைகளின் கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட இதர தேவைகள் மாவட்ட கலெக்டர் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு அதன்மூலம் குழந்தைகள் நலன் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இலவச வீட்டுமனை பட்டாக்கள்
மேலும், குழந்தைகளின் உயர்கல்வியை அவர்களது படிப்பு செலவை மாவட்ட நிர்வாகம் ஏற்கும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
வண்டலூர் வட்டத்திற்குட்பட்ட கீழ்கோட்டையூர் கிராமத்திற்குட்பட்ட பகுதியில் வசிக்கும் இருளர் இனத்தை சேர்ந்த 46 குடும்பங்களுக்கு ரூ.4.6 கோடி மதிப்பீட்டில் வருவாய்த் துறை சார்பில் இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது.முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்டம் ஒருங்கிணைந்த பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்துடன் இணைந்து சுமார் 1,450 வகையான நோய்களுக்கு சிகிச்சை வழங்கப்படுகிறது, இத்திட்டத்தில் ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரம் வரை குறைவாக உள்ள குடும்பங்களுக்கு வருடத்திற்கு ரூ.5 லட்சம் வரை அங்கீகரிக்கப்பட்ட தனியார் மற்றும் அரசு மருத்துவமனகளில் மருத்துவ சிகிச்சை பெறலாம். இது நாள் வரை ரூ.42.64 லட்ச நபர்கள் பயன் அடைந்துள்ளனர். இத்திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு ரூ.7,987 கோடி ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளது.
காப்பீட்டு அட்டை
செங்கல்பட்டு மாவட்டத்தில், 2019-ம் ஆண்டு நவம்பர் முதல் 5,181 நபர்களுக்கு முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு அட்டை வழங்கப்பட்டுள்ளது சுமார் 58,282 நபர்களுக்கு ரூ.110.89 கோடி மதிப்பீட்டில் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை வழங்கப்பட்டு பொதுமக்கள் பயனடைந்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 34 தனியார் மருத்துவமனைகள் மற்றும் 7 அரசு மருத்துவமனைகள், என மொத்தம் 41 மருத்துவமனைகள் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.கொரோனா 2-ம் அலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் சுமார் 1,732 பயனாளிகள் தனியார் மருத்துமனையில் ரூ.25.90 கோடி மதிப்பீட்டில் சிகிச்சை பெற்றுள்ளனர்
இவ்வாறு அவர் பேசினார்.
பாராட்டு சான்றிதழ்கள்
இதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு மின்நுகர்வோர் மற்றும் பகிர்மான கழகம், செங்கல்பட்டு மின்பகிர்மான வட்டத்தில் 6 நபர்களுக்கு வாரிசு வேலை பணிநியமன ஆணைகளையும், இலவச விவசாய மின் இணைப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மின்சார இணைப்பு பெறுவதற்கான ஆணையினையும் வழக்கினார்.
பின்னர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பாக பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா - முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் அடையாள அட்டைகளையும், மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல்ராஜ், இணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) ஜீவா, மாவட்ட ஊராட்சி மன்ற குழுத்தலைவர் செம்பருத்தி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.