ஈரோடு மாவட்டத்தில் 2-வது நாளாக ஜவுளி கடைகள் அடைப்பு; ரூ.100 கோடி வர்த்தகம் பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் 2-வது நாளாக ஜவுளி கடைகள் அடைக்கப்பட்டதால் ரூ.100 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.;

Update:2021-11-19 02:04 IST
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் 2-வது நாளாக ஜவுளி கடைகள் அடைக்கப்பட்டதால் ரூ.100 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
கடையடைப்பு போராட்டம்
நூல் விலை உயர்வை கண்டித்து, ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் சார்பில் 2 நாட்கள் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று முன்தினம் தொடங்கி நேற்று 2-வது நாளாக கடையடைப்பு போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு 18 அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன.
இதனால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜவுளி கடைகள் மற்றும் குடோன்கள் கடந்த 2 நாட்களாக அடைக்கப்பட்டன. இதன் காரணமாக எப்போதும் பரபரப்பாக காணப்படும், ஈரோடு திருவேங்கடசாமி வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, அகில்மேடு வீதி போன்ற பகுதிகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
ரூ.100 கோடி வர்த்தகம் பாதிப்பு
இதுகுறித்து ஜவுளி வியாபாரிகள் கூறியதாவது:-
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நூல் விலை 40 முதல் 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதனால் தறிகளில் துணியாக நெசவு செய்து, அதனை வாங்கி, பிளீச்சிங், டையிங், பிரிண்டிங், காலண்டரிங் செய்வோர், மடி தொழிலாளர், சுமைதூக்கும் பணியாளர், ஜவுளி விற்பனையாளர்கள் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளோம்.
எனவே நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாதம் ஒரு முறை அல்லது குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை நூல் விலையை உயர்த்த வேண்டும். நூல், பஞ்சு ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும். கடந்த 2 நாட்கள் கடையடைப்பு காரணமாக ரூ.100 கோடி அளவில் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்