கைதிகளின் மருத்துவ பரிசோதனை நெறிமுறைகளை மாற்றி அமைக்க வேண்டும்-தமிழக அரசுக்கு, மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

கைதிகளின் மருத்துவ பரிசோதனை நெறிமுறைகளை மாற்றி அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-11-18 21:22 GMT
மதுரை
கைதிகளின் மருத்துவ பரிசோதனை நெறிமுறைகளை மாற்றி அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மனநல பாதிப்பு
தூத்துக்குடி மாவட்டம் தட்டப்பாறை போலீஸ் சரகத்தில் கந்து வட்டி கொடுமையால் பிரம்மராஜன் என்பவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவர் மனநல பாதிப்புக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை நெல்லை அரசு மருத்துவமனைக்கு மாற்றக்கோரி அவருடைய மனைவி, மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
மனுதாரரின் கணவருக்கு ஏற்பட்ட மனநல பாதிப்புக்காக கடந்த 2019-ம் ஆண்டு முதல் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் தினமும் 9 மாத்திரைகள் சாப்பிடுகிறார். ஆனால் அவரது மனநல பாதிப்பு போலீசாருக்கும், சிறை அதிகாரிகளுக்கும் தெரியவில்லை. சாதாரண நபரை போல சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்படும் நபர் எந்திரத்தனமாக அளிக்கும் பதிலின் அடிப்படையில் அவர் சிறையில் அடைக்க தகுதியானவர் என சான்று அளிப்பதை ஏற்க முடியாது.
நெறிமுறையை மாற்ற வேண்டும்
இதனால் கைதிகளின் மருத்துவ பரிசோதனை நெறிமுறைகளை (புரோட்டகால்) தமிழக அரசு மாற்றியமைக்க வேண்டும். கைதிகளின் மருத்துவ குறிப்பேட்டில் மனநல பாதிப்பு குறித்து தெரிவிக்க தனிப்பகுதி அளிக்க வேண்டும். அந்த பகுதியில், கைது செய்யப்படும் நபரை டாக்டர் பரிசோதிக்கும் போது, அவரது மனநிலை குறித்து உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் தகவல் கேட்டு பெற்று நிரப்ப வேண்டும். பல்வேறு வகையான மனநல பாதிப்புகள் உள்ளன. இந்த பாதிப்புகள் குறித்து போலீஸ் அகாடமி, நீதித்துறை அகாடமி மூலம் காவல் துறையினர் மற்றும் நீதித்துறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மனுதாரரின் கணவரை உடனடியாக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்து உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்