மதுரை-திருப்பதி விமான சேவை தொடங்கியது

மதுரை-திருப்பதி விமான சேவை தொடங்கியது-முதல் நாளில் 53 பேர் பயணம்;

Update:2021-11-20 02:22 IST
மதுரை
மதுரையில் இருந்து சென்னை, பெங்களுரூ, மும்பை, ஐதராபாத், டெல்லி உள்ளிட்ட நகரங்களுக்கு தினமும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் மதுரையில் இருந்து துபாய் மற்றும் இலங்கை போன்ற வெளிநாடுகளுக்கும் விமான சேவை நடக்கிறது.
இந்தநிலையில் மதுரையில் இருந்து திருப்பதிக்கு விமானங்கள் இயக்க வேண்டும் என தென் மாவட்ட மக்கள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்தனர். அவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப தனியார் விமான நிறுவனம் மூலம் நவம்பர் மாதம் 19-ந்தேதி முதல் மதுரையில் இருந்து தினமும் திருப்பதிக்கு விமான சேவை தொடங்கப்படும் என அறிவித்தது. மதுரையில் இருந்து தினமும் மதியம் 3 மணிக்கு புறப்பட்டு, மாலை 4.20 மணிக்கு திருப்பதி சென்றடையும். மீண்டும் அதே விமானம் மாலை 4.40 மணிக்கு திருப்பதியில் இருந்து புறப்பட்டு 6.05 மணிக்கு மதுரை வந்தடையும் என அறிவிக்கப்பட்டிருந்தது. முதல் நாளான நேற்று மதுரையில் இருந்து திருப்பதிக்கு 53 பயணிகள் பயணம் செய்தனர். அவர்களுக்கு மதுரை விமான நிலையத்தில் தனியார் விமான நிறுவனத்தின் சார்பில் பூக்கள் கொடுத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதுபோல், திருப்பதியில் இருந்து மதுரை வந்த 11 பயணிகளுக்கும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருப்பதியில் தற்போது கனமழை பெய்து வருவதால், பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும், வரும் நாட்களில் அதிக பயணிகள் பயணம் செய்வார்கள் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்