மாங்காடு அருகே வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை

மாங்காடு அருகே வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2021-11-20 16:37 IST
பூந்தமல்லி,

மாங்காடு அடுத்த நெல்லிதோப்பு பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 24), இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கவுசல்யா (20) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தியாகராஜன் வீட்டில் இருந்த அறையில் தூக்கில் தொங்குவதை கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மாங்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்துபோன தியாகராஜன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணையில் தியாகராஜன் கடந்த மாதம் அதே பகுதியை சேர்ந்த ஒருவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தாக்கியதில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தவர் என்பதும் மாங்காடு போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் இறந்துபோன தியாகராஜனுக்கும் அவரது உறவினர் ஒருவருக்கும் ஏற்கனவே தகராறு இருந்து வந்ததாகவும் சமீபகாலமாக இருவரும் பார்க்கும் போதெல்லாம் தகராறில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் உள்ளாட்சி தேர்தல் நேரத்தில் இருவரும் எதிரெதிராக வேட்பாளர்களுக்கு வேலை செய்ததாகவும் அதன் காரணமாக பிரச்சினை ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர்கள் ஏற்படுத்திய மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோர் மற்றும் நண்பர்கள் மாங்காடு போலீசில் புகார் அளிக்க வந்தனர். போலீசார் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுகுறித்து மாங்காடு போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்