பொள்ளாச்சியில் போலீஸ்காரர் மயங்கி விழுந்து சாவு
பொள்ளாச்சியில் போலீஸ்காரர் மயங்கி விழுந்து சாவு;
பொள்ளாச்சி
பொள்ளாச்சி தாலுகா போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் ஜவகர்லால் நேரு (வயது 52). இவர் வடக்கிபாளையம் பிரிவு பாலாஜி நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இவருக்கு உஷாராணி என்கிற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இந்த நிலையில் அவர் நேற்று காலை வழக்கம் போல் வீட்டில் இருந்து சீருடை அணிந்து போலீஸ் நிலையத்திற்கு வருவதற்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அப்போது திடீரென்று அவர் மயங்கி விழுந்தார்.
அவரை மனைவி மற்றும் அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பொள்ளாச்சி தாலுகா போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் இறந்த ஜவகர்லால் நேருவுக்கு நுரையீரல் பிரச்சினை இருந்ததாக தெரிகிறது. எனவே அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. பரிசோதனை முடிவுக்கு பிறகு பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.