நகராட்சி பூங்காவில் காய்கறிகள் அறுவடை

நகராட்சி பூங்காவில் காய்கறிகள் அறுவடை;

Update:2021-11-20 23:01 IST
பொள்ளாச்சி

நகராட்சி பூங்காவில் அறுவடை  செய்த காய்கறிகள் தூய்மை பணியாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

காய்கறி அறுவடை

பொள்ளாச்சி நகராட்சி ஜோதி நகர் பூங்காவில் காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் காய்கறிகள் அறுவடை நிகழ்ச்சி நடைபெற்றது. 

நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி கலந்துகொண்டு காய்கறி அறுவடையை தொடங்கி வைத்தார். நிலக்கடலை, சின்ன வெங்காயம், வெள்ளை பூசணி, சர்க்கரை கிழங்கு, தக்காளி, வெண்டைக்காய், கீரை வகைகள், மிளகாய், பப்பாளி மற்றும் வாழைப்பழங்கள் அறுவடை செய்யப்பட்டன.

இதை தொடர்ந்து பொதுமக்கள், தூய்மை பணியாளர்களுக்கு காய்கறிகளை நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி இலவசமாக வழங்கினார். இதில் நகர்நல அலுவலர் டாக்டர் ராம்குமார், சுகாதார ஆய்வாளர்கள் தர்மராஜ், ஜெயபாரதி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது

ஜோதி நகர் பூங்காவில் நுண் உரமாக்கல் மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 35-வது வார்டு உள்பட 8 வார்டுகளில் இருந்து குப்பைகளை கொண்டு வந்து தரம் பிரிக்கப்படுகிறது. பின்னர் அங்கேயே குப்பையில் இருந்து உரம் தயாரிக்கப்படுகிறது. 

இங்கு தயாரிக்கப்படும் உரங்களை கொண்டு காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகிறது. சுமார் 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட பூங்காவில் 2 ஏக்கரில் கடந்த ஜூன் மாதம் காய்கறி சாகுபடி செய்யப்பட்டது.

தற்போது அறுவடை செய்ததில் 50 கிலோ வரை கிடைத்தது. காய்கறிகளுக்கு ரசாயன உரம் எதுவும் இடாமல் இயற்கை உரத்தை பயன்படுத்தி மட்டும் விளைவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து குப்பைகளை தரம் பிரித்து

 உரமாக்கும் பணிகள் மற்றும் காய்கறி தோட்டத்தை பராமரிக்கும் பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு காய்கறிகள் இலவசமாக வழங்கப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்