விவசாயிகள் மீதான பொய் வழக்குகளை திரும்ப பெற வேண்டும்-மத்திய அரசுக்கு தொல்.திருமாவளவன் கோரிக்கை

வேளாண் சட்டத்தை ரத்து செய்ய போராடிய விவசாயிகள் மீதான பொய் வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என மத்திய அரசுக்கு தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்து உள்ளார்.

Update: 2021-11-21 19:28 GMT
மதுரை, 

வேளாண் சட்டத்தை ரத்து செய்ய போராடிய விவசாயிகள் மீதான பொய் வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என மத்திய அரசுக்கு தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்து உள்ளார்.

வேளாண் சட்டங்கள்

மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விவசாயிகளின் தொடர் போராட்டத்தின் வெற்றியாக மோடி அரசு பணிந்து இருக்கிறது. அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமான பல சட்டங்களை மோடி அரசு கொண்டு வருகிறது. குடியுரிமை திருத்த சட்டம், முத்தலாக் சட்டம், ஜம்மு காஷ்மீரை மாநிலத்தில் இருந்து உடைத்து யூனியன் பிரதேசமாக மாற்றிய சட்டம் என அடுக்கிக் கொண்டே போகலாம். 4 மாநில சட்டமன்ற பொதுத்தேர்தலை கருத்தில் கொண்டு தடாலடியாக 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்துள்ளது. இதுபோல், மத்திய அரசு கொண்டு வந்துள்ள மக்கள் விரோத சட்டங்களை எல்லாம் திரும்ப பெற வேண்டும்.
விவசாயிகளின் போராட்டத்தில் உயிரிழந்த நூற்றுக்கணக்கான விவசாயிகளின் குடும்பங்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும். தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் 750 குடும்பங்களுக்கும் தலா ரூ.3 லட்சம் கொடுக்க போவதாக அறிவித்திருக்கிறார்.
இறந்து போனவர்கள் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் அல்ல என்றாலும் கூட விவசாயிகளின் குடும்பத்தினருக்கு ஆறுதல் அளிப்பதால் இதனை வரவேற்கிறோம். எனவே மத்திய அரசும் உயிரிழந்த அத்தனை குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பினை வழங்க வேண்டும். விவசாயிகள் மீது புனையப்பட்ட அனைத்து பொய் வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும்

துணை வேந்தர் பதவி

தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி ஆங்காங்கே காலியாகி வருகின்றன. அந்த பதவிகளில் பலர் நியமனம் செய்யப்படுகிறார்கள். மதுரை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவி நிரப்பப்படாமல் உள்ளது ஏன் என்று தெரியவில்லை. அங்கு துணைவேந்தர் பணியிடம் நியமிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிகளில் தலித் மற்றும் பழங்குடி சமூகங்களைச் சார்ந்தவர்கள் நியமிக்க வேண்டும். அண்மையில் கூட முதல்-அமைச்சரை சந்தித்து, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கான துணைவேந்தரை நியமிக்கும் போது தலித் மற்றும் பழங்குடி சமூகத்தினரை கவனத்தில் கொண்டு அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். எல்லாம் கவர்னரே தீர்மானிக்கிறார் என்ற ஒரு நிலைபாடு இருக்கிறது. எனவே, தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதல்- அமைச்சரை நியமிக்கும் வகையில் சட்டதிருத்தம் கொண்டு வந்து அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்