பாலியல் புகார்: அரசு பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது
பாலியல் புகார் காரணமாக அரசு பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.;
பெருந்துறை
பாலியல் புகார் காரணமாக அரசு பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
போலீசார்-அதிகாரிகள்
பெருந்துறையை அடுத்துள்ள சீனாபுரத்தில், அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் பெருந்துறை குன்னத்தூர் ரோடு அய்யப்பன் கோவில் அருகே உள்ள கூட்டுறவு நகரை சேர்ந்த திருமலைமூர்த்தி (வயது 50) என்பவர் உயிரியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் இவர் மீது முன்னாள் மாணவர்கள் சிலர் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இதையடுத்து இது குறித்து விசாரணை நடத்துமாறு ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதன் பேரில் நேற்று முன்தினம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு போலீசார் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகளிடம் விசாரணை நடத்தினர்.
கைது
நேற்று முன்தினம் மதியம் 3 மணிக்கு தொடங்கிய இந்த விசாரணை, இரவு 7.30 மணி வரை நீடித்தது.
மேலும் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஆசிரியரை தேடி அவருடைய வீட்டிற்கு போலீசார் சென்றனர். பின்னர் அங்கு இருந்த ஆசிரியரை விசாரணைக்காக போலீசார் ஈரோட்டிற்கு அழைத்து வந்தனர். அவரிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தினர்.
இதில் திருமலைமூர்த்தி மாணவிகளிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரை போக்சோ சட்டத்தின் கீழ் ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.