டிரைவரை தாக்கி அரசு பஸ் கண்ணாடி உடைப்பு

ஒருவரை ஒருவர் முந்தி செல்வதில் ஏற்பட்ட தகராறில் டிரைவரை தாக்கி அரசு பஸ் கண்ணாடியை உடைத்த சிவகங்கையை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-11-23 20:10 GMT
மதுரை,

ஒருவரை ஒருவர் முந்தி செல்வதில் ஏற்பட்ட தகராறில் டிரைவரை தாக்கி அரசு பஸ் கண்ணாடியை உடைத்த சிவகங்கையை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.

முந்தி செல்வதில் தகராறு

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 38). இவர் மதுரையில் இருந்து திருப்பூர் செல்லும் அரசு பஸ்சில் டிரைவராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் மாலை அவர் பஸ்சை ஆரப்பாளையத்தில் இருந்து எடுத்து கொண்டு காளவாசல் வழியாக திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது பஸ்சின் பின்னால் கார் ஒன்று வந்தது. அந்த கார் பஸ்சை முந்த முயன்றது. 
ஆனால் அந்த சாலை மிகவும் குறுகியதாக இருப்பதால் பஸ் டிரைவரால் காருக்கு வழி விட முடியவில்லை.ஒரு கட்டத்தில் கார் டிரைவர் முந்தி சென்று பஸ்சை வழிமறித்து நிறுத்தினார். பின்னர் அவர் காரில் இருந்து இறங்கி வந்து பஸ் டிரைவர் முத்துக்கிருஷ்ணனிடம் தகராறு செய்தார். 

பஸ் கண்ணாடி உடைப்பு

மேலும் அவர் ஆத்திரத்தில் பஸ் டிரைவரை இரும்பு கம்பியால் தாக்கி பஸ் கண்ணாடியையும் உடைத்தார். இதில் முத்துக்கிருஷ்ணன் படுகாயம் அடைந்தார்.
அரசு பஸ் டிரைவர் தாக்கப்பட்டார் என்பதை அறிந்ததும் அந்த வழியாக வந்த அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் பஸ்களை நிறுத்தி விட்டு அங்கு விரைந்து வந்தனர். இதை பார்த்த கார் டிரைவர் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார். ஆனால் அங்கிருந்தவர்கள் அவரை மடக்கி பிடித்தனர். இதனால் அங்கு போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் போக்குவரத்து போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

கைது

அவர்கள் அரசு பஸ் டிரைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அந்த பகுதியில் போக்குவரத்தை சீரமைத்தனர். அதன்பின்னர் முத்துக்கிருஷ்ணன் தன்னை தாக்கியதாக எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் கார் டிரைவரை பிடித்து விசாரித்தனர். அதில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த டிரைவர் சுரேஷ் (36) என்பதும், அவர் மதுரை விராட்டிபத்து பகுதியில் உள்ள ஒருவருக்கு டிரைவாக வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது. பின்னர் அரசு ஊழியரை தாக்கி, பஸ்சை சேதப்படுத்தியதாக அவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்