தரமற்ற ரேஷன் அரிசியை ரோட்டில் கொட்டி பெண்கள் மறியல்

மேலூர் அருகே தரமற்ற ரேஷன் அரிசியை ரோட்டில் கொட்டி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-11-23 21:12 GMT
மேலூர், 

மேலூர் அருகே தரமற்ற ரேஷன் அரிசியை ரோட்டில் கொட்டி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

துர்நாற்றம் வீசும் ரேஷன் அரிசி

மேலூர் தாலுகாவில் 170-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ளன. கடந்த சில நாட்களாக அனைத்து ரேஷன் கடைகளிலும் இலவசமாக வழங்கும் அரிசி தரமற்றதாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும் கிராம மக்கள் அந்தந்த ரேஷன் கடை ஊழியர்களிடம் புகார் கூறி தகராறில் ஈடுபட்டனர். இருப்பினும் தொடர்ந்து அதே அரிசியை தான் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டது. 
இந்நிலையில் நேற்று மேலூர் -அழகர்கோவில் ரோட்டில் உள்ள கிடாரிப்பட்டியில் ரேஷன் கடையில் தரமற்ற அரிசி வழங்கியதை கண்டித்து ஏராளமான பெண்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தரமற்ற ரேஷன் அரிசியை ரோட்டில் கொட்டி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதனால் அந்த வழியே வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். தரமான ரேஷன் அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பெண்கள் மறியலை கைவிட்டனர்.
 இதே போன்று பெரிய கற்பூரம்பட்டியிலும் ரேஷன் அரிசி தரமற்று இருப்பதை கண்டித்து ரேஷன் கடையை முற்றுகையிட்டு ஏராளமான பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலூர் தாலுகாவில் நல்ல தரமான அரிசியை ரேஷன் கடைகளில் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்