காவலாளி போல உடை அணிந்து இரவில் கடைகளின் பூட்டை உடைத்த ஆசாமி கைது

மேலூரில் காவலாளி போல உடை அணிந்து இரவில் கடைகளில் கைவரிசை காட்டிய ஆசாமி கைது செய்யப்பட்டார்.

Update: 2021-11-23 21:18 GMT
மேலூர், 

மேலூரில் காவலாளி போல உடை அணிந்து இரவில் கடைகளில் கைவரிசை காட்டிய ஆசாமி கைது செய்யப்பட்டார்.

கடைகளில் திருட்டு

மேலூரில் கடந்த சில நாட்களாக கடைகளில் பூட்டை உடைத்து திருடும் சம்பவம் தொடர்ச்சியாக நடந்தது. அவ்வாறு பூட்டு உடைக்கப்பட்ட கடைகளில் சிகரெட், பீடி, சாப்பிட தேவையான பொருட்கள் மற்றும் சிறிதளவு பணமும் திருடு போனது. பாதிக்கப்பட்ட கடை வியாபாரிகள் மேலூர் போலீசில் புகார் கொடுத்தனர். 
இதனையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆலோசனையின் பேரில் மேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சுதன், ஜெயகுமார் மற்றும் போலீசார் காளிராஜ் ஆகியோர் திருடர்களை தீவிரமாக தேடிவந்தனர்

ஆசாமி கைது

அப்போது இரவில் காவலாளி அணியும் உடையுடன் சந்தேகப்படும்படியாக இருந்தவனை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவன் கிருஷ்ணகிரியை சேர்ந்த கோவிந்தராஜ் (வயது 40) எனவும் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இவன் மீது வழக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த மாதம் மதுரை நாகமலைபுதுக்கோட்டையில் பல கடைகளில் பூட்டுக்களை உடைத்து திருடி உள்ளான். இவன் திருட செல்லும்போது இரவு நேர காவலாளி போல உடை அணிந்து சர்வ சாதாரணமாக கடைகளின் பூட்டுக்களை உடைத்து கைவரிசை காட்டியுள்ளான் என போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவனை போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே. மேலூரில் இரவில் துப்பாக்கியுடன் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்