மழையால் மரம் விழுந்து வீடு சேதம்

மழையால் மரம் விழுந்து வீடு சேதம்

Update: 2021-11-25 14:10 GMT
வால்பாறை

வால்பாறையில் மழையால் மரம் விழுந்து வீடு சேதம் அடைந்தது. மேலும் வாலிபர் ஒருவர் படுகாயம் அடைந்தார். 

வேரோடு சாய்ந்தது

வால்பாறையில் பருவமழைகள் நின்று விட்ட நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஏற்பட்டு வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அவ்வப்போது இரவில் மட்டும் லேசான மழை பெய்து வருகிறது. 
இந்த மழை காரணமாக வால்பாறை அருகில் உள்ள ஸ்டேன்மோர் எஸ்டேட் பகுதியில் தோட்ட அலுவலக அதிகாரிகள் மற்றும் எஸ்டேட் ஆஸ்பத்திரி பணியாளர்கள் குடியிருப்புக்கு அருகில் பட்டுப்போன நிலையில் இருந்த மரம் ஒன்று நேற்று காலையில் வேரோடு சாய்ந்து விழுந்தது. 

வாலிபர் படுகாயம்

இதில் ஸ்டேன்மோர் எஸ்டேட் தோட்ட அலுவலகத்தில் பணியாற்றும் ஜீசன்கோசி என்பவரின் வீட்டின் மீது மரக்கிளைகளை முறிந்து விழுந்து வீட்டின் ஓடுகள் உடைந்து வீட்டுக்குள் விழுந்தன.
இதில் வீட்டுக்குள் இருந்து அவரின் உறவினரான வாலிபர் மீது ஓடுகள் விழுந்ததில் மண்டை உடைந்து படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் ஸ்டேன்மோர் எஸ்டேட் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

பரபரப்பு

மரம் விழுந்தது குறித்த எஸ்டேட் நிர்வாகத்தினர் வால்பாறை  வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, பார்வையிட்டனர். மேலும், வீட்டின் மீது விழுந்த மரக்கிளைகளை அப்புறப்படுத்தும் பணி நடந்தது. 
இந்த சம்பவம் அந்தப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்