காய்கறி சந்தையில் தக்காளி விலை திடீர் வீழ்ச்சி

காய்கறி சந்தையில் தக்காளி விலை திடீர் வீழ்ச்சி

Update: 2021-11-25 14:10 GMT
கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் தக்காளி விலை திடீர் வீழ்ச்சி அடைந்து ஒரு கிலோ ரூ.58-க்கு விற்பனை ஆனது.

வரத்து குறைவு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதிகளில் முக்கிய விவசாய தொழிலாக தக்காளி விவசாயம் இருந்து வருகிறது. கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்த காரணத்தால் தக்காளி உற்பத்தி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தைக்கு குறைந்த அளவில் தக்காளி வரத்து இருக்கிறது. இந்தநிலையில் குறைந்த அளவில் வந்த தக்காளிகளை கொள்முதல் செய்ய அதிக வியாபாரிகள் ஏலம் கேட்க வந்ததால் கிணத்துகடவு தினசரி காய்கறி சந்தையில் கடந்த 21-ம் தேதி ஒரு கிலோ தக்காளி ரூ.100 வரைக்கு விற்பனையானது. இதனால் கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதிகளில் சில்லரை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.120 முதல் ரூ.130 வரை தக்காளி விற்பனை செய்யப்பட்டு வந்தது. 

திடீர் வீழ்ச்சி

இந்தநிலையில் தற்போது தக்காளி விலை உயர்வு காரணமாக தக்காளியை உபயோகிக்கும் பொதுமக்களின் எண்ணிக்கை குறைந்ததால் தக்காளிகளை கொள்முதல் செய்வதில் வியாபாரிகளுக்கும் தயக்கம் ஏற்பட்டது. இதன்காரணமாக தக்காளி விற்பனையும் கடைகளில் குறைந்துள்ளது. இதனால் நேற்று தக்காளி விலை திடீரென வீழ்ச்சி அடைந்தது. கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தையில் நடைபெற்ற ஏலத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.58-க்கு மட்டும் ஏலம் போனது. இந்த விலை கடந்த 4 நாட்களில் ஒரு கிலோவிற்கு ரூ.42 விலை வீழ்ச்சியடைந்துள்ளது. 

ரூ.58-க்கு விற்பனை

இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறியதாவது:- தக்காளி விலை கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்பட்டது. அதிக விலைக்கு தினசரி காய்கறி சந்தையில் ஏலம் போனதால், சில்லரை கடைகளில் விற்பனை பெரிய அளவில் சரிவு ஏற்பட்டது. இதனால் தக்காளிகளை கொள்முதல் செய்ய தயக்கம் ஏற்பட்டது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.58-க்கு விற்பனை ஆனது.. தற்போது தமிழக அரசும்  தக்காளி விலையை குறைக்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வருவதால் இன்னும் ஒரு சில நாட்களில் தக்காளி விலை மீண்டும் குறைய தொடங்கும் என்றார்.

மேலும் செய்திகள்