கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் கோவையில் போலீசார் விசாரணை

கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் கோவையில் போலீசார் விசாரணை

Update: 2021-11-25 15:19 GMT
கோவை

கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனை கோவைக்கு வரவழைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

கோடநாடு கொலை வழக்கு

கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 24.4.2017-ந் தேதி காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டதுடன் அங்கிருந்த பொருட்கள்  கொள்ளையடிக்கப்பட்டன. இந்த நிலையில் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ், சேலம் ஆத்தூரிலும், கொலை வழக்கில் கைதான சயானின் மனைவி பாலக்காடு பகுதியில் நடைபெற்ற விபத்திலும் இறந்தனர். 

கோடநாடு எஸ்டேட் கணினி ஊழியர் தினேஷ் தற்கொலை செய்து கொண்டார். இந்த 4 சம்பவங்களையும் தற்போது போலீசார் மறு விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்காக அமைக்கப்பட்டு உள்ள தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

போலீசார் மறுஆய்வு 

இந்த வழக்குகளில் பல முக்கிய ஆவணங்கள் அழிக்கப்பட்டு உள்ளன. மேலும் பதிவான போன் எண்கள் உள்ளிட்ட விவரங்களையும் போலீ சார் மறுஆய்வு செய்து வருகிறார்கள். இந்த வழக்கில் கார் டிரைவர் கனகராஜின் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் ஆகியோர் தகவல் களை மறைத்ததால் தற்போது கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த சம்பவங்கள் தொடர்பாக கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் ஏற்கனவே மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.சுதாகர் நேரடியாக விசாரணை நடத்தினார். மேலும் கோடநாடு பங்களாவிற்கு சென்று முக்கிய தகவல்கள் பதிவு செய்யப்பட்டன.

மேலாளரிடம் கோவையில் விசாரணை 

இந்த நிலையில் இந்த தொடர்பாக கோவையில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் உள்ள அலுவலகத்தில் ஆஜராகும்படி கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனுக்கு போலீசார் மீண்டும் சம்மன் அனுப்பினர். 
இதைத்தொடர்ந்து அவர் கோவையில் ஆஜரானார். அவரிடம் தனிப்படையை சேர்ந்த கூடுதல் சூப்பிரண்டு மற்றும் துணை சூப்பிரண்டுகள் துருவித்துருவி விசாரணை நடத்தினார்கள். 

வாக்குமூலம் பதிவு 

கொலை, கொள்ளை, விபத்து, தற்கொலை என்று அடுத்தடுத்து சம்பவங்கள் நடந்ததால் நடராஜனுக்கு தெரிந்த தகவல்களை கூறும்படி தனிப்படை அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். மேலும் யார்? யார் வந்து சென்றனர்.

 முக்கிய பிரமுகர்களுக்கு இதில் பின்னணி உள்ளதா? என்றும் விசாரிக்கப்பட்டு வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டதாக தெரிகிறது. 
இந்த வழக்கில் தற்போது மறுவிசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்