தேசிய பேரிடர் நிதியில் இருந்து ரூ.900 கோடி ஒதுக்க வேண்டும் - மத்திய அரசுக்கு கர்நாடகம் கோரிக்கை

கர்நாடகத்தில் மழை-வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் நிதியில் இருந்து ரூ.900 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கர்நாடகம் கோரிக்கை விடுத்துள்ளது.

Update: 2021-11-25 22:05 GMT
பெங்களூரு:

கனமழையால் பாதிப்பு

  கர்நாடகத்தில் வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. கடந்த 15 நாட்களாக பெய்த கனமழைக்கு பெங்களூரு, கோலார், சிக்பள்ளாப்பூர், சித்ரதுர்கா, துமகூரு, கலபுரகி உள்பட மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. 700-க்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாக இடிந்துள்ளன. 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் ஒரு பகுதியாக இடிந்துள்ளன.

  மழைக்கு 24 பேர் பலியாகி உள்ளனர். சுமார் 6 லட்சம் எக்டேரில் வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் நாசமாகி உள்ளன. 600-க்கும் மேற்பட்ட பாலங்களும், 2 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகளும் சேதமடைந்துள்ளன. 1,225 அரசு பள்ளி கட்டிடங்களும், 39 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களும் சேதம் அடைந்துள்ளன. இந்த பாதிப்புகளுக்கு மாநில அரசு ஏற்கனவே நிவாரணம் அறிவித்தது.

அரசாணை வெளியீடு

  இந்த நிலையில் வெள்ள நிவாரண நிதி தொடர்பாக அரசு நேற்று அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

  மழையால் வீடுகளில் வெள்ளம் புகுந்து வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் துணி-மணிகள் சேதம் அடைந்திருந்தால், தேசிய பேரிடர் நிவாரண நிதி விதிமுறைகளின்படி ரூ.3,800 நிவாரணமாக வழங்கப்பட வேண்டும். அதனுடன் மாநில அரசு கூடுதலாக ரூ.6,200 சேர்த்து மொத்தம் ரூ.10 ஆயிரம் வழங்குகிறது. வீடுகள் முழுமையாக சேதமடைந்திருந்தால் ரூ.95 ஆயிரத்து 100 வழங்கப்பட வேண்டும். ஆனால் மாநில அரசு கூடுதலாக 4 லட்சத்து 4 ஆயிரத்து 900 வழங்கி மொத்தம் ரூ.5 லட்சம் வழங்குகிறது.

ரூ.5 லட்சம் நிவாரணம்

  வீடுகள் பாதி சேதமடைந்திருந்தால், அவா்கள் பி2 பிரிவை சேர்ந்தவராக இருந்தால் அவர்களுக்கும் வீடுகளை புதிதாக கட்ட ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்.
  அதே போல் பி1 பிரிவினரின் வீடுகள் பாதி சேதமடைந்து இருந்தால் அவர்களுக்கும் ரூ.5 லட்சம் வழங்கப்படும். வீடுகள் 25 சதவீதம் வரை சேதம் அடைந்திருந்தால் பேரிடர் விதிமுறைகள்படி ரூ.5,200 வழங்கப்பட வேண்டும். ஆனால் அரசு கூடுதலாக ரூ.44 ஆயிரத்து 800 சேர்த்து மொத்தம் ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்.
  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ரூ.900 கோடி நிதி ஒதுக்க கோரிக்கை

  இந்த நிலையில், கர்நாடகத்தில் மழை-வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களுக்கு தேசிய பேரிடர் நிதியில் இருந்து ரூ.900 கோடி நிதி ஒதுக்க மத்திய அரசுக்கு, கர்நாடக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
  கர்நாடகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழைக்கு பல பகுதிகளில் வீடுகள் சேதமடைந்துள்ளன. பெங்களூருவில் சில பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து பாதிப்புகளை ஏற்படுத்தியது. சேதமடைந்த வீடுகளுக்கு அரசு அறிவித்துள்ள நிவாரணத்தை உடனே வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். அதே போல் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நிவாரணம் வழங்கப்படுகிறது.

  மழை சேதங்களுக்கு நிவாரணம் வழங்க தேசிய பேரிடர் நிதியில் இருந்து ரூ.900 கோடி நிதி ஒதுக்குமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். நாளை (அதாவது இன்று) இன்னொரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கர்நாடகத்தில் மழை பெய்யக்கூடிய வாய்ப்பு உள்ளது.

முன்எச்சரிக்கை நடவடிக்கை

  அதனால் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 3 நாட்களுக்கு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். அதே போல் பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம், மழையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளேன்.
  இவ்வாறு ஆர்.அசோக் கூறினார்.

மேலும் செய்திகள்