அரசு பள்ளியை சுற்றி குளம்போல் தேங்கிய மழைநீர்

மேலூர் அருகே அரசு பள்ளியை சுற்றி குளம்போல் தேங்கிய மழைநீரால் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வேறு இடத்தில் வகுப்புகள் நடத்தப்பட்டது.;

Update:2021-11-28 00:59 IST
மேலூர்
மேலூர் அருகே அரசு பள்ளியை சுற்றி குளம்போல் தேங்கிய மழைநீரால் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வேறு இடத்தில் வகுப்புகள் நடத்தப்பட்டது. 
மழை நீர் சூழ்ந்தது
மதுரை மாவட்டம் மேலூர் பகுதிகளில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் கண்மாய்கள் உள்பட அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில் ெதாடர் மழையால் மேலூர் அருகே உள்ள கொடுக்கம்பட்டியில் ஊருணி, கண்மாய்கள் நிரம்பின. 
மேலும் அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியை சுற்றியுள்ள பகுதியை மழைநீர் சூழ்ந்தது. பள்ளி வளாகத்தில் மழைநீர் புகுந்து குளம்போல் தேங்கி நின்றது. இதனால் நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள், மாணவர்கள் பள்ளிக்குள் தண்ணீர் காணப்பட்டதால் திகைத்து நின்றனர். மெயின்ரோட்டில் இருந்து பள்ளிக்கூடத்துக்கு செல்ல அமைக்கப்பட்ட பாதையில் நடந்து செல்ல முடியாத அளவுக்கு 5 அடி உயரத்துக்கு தண்ணீர் நின்றது. இதனால் மாணவர்களும் ஆசிரியர்களும் பள்ளிக்கூடத்துக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. 
கோரிக்கை
இதையடுத்து 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களை வீட்டுக்கு திருப்பி அனுப்பி வைத்தனர். 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் அருகிலுள்ள அரசு தொடக்கப்பள்ளியில் பாடம் கற்பிக்கப்பட்டது. கனமழையால் பள்ளி வளாகம் முழுவதும் மழைநீரால் சூழ்ந்து நிற்பதால் பள்ளி மாணவர்கள் படிப்பு கேள்விக்குறியாகி உள்ளது. 
எனவே பள்ளி வளாகத்தில் தேங்கிய மழைநீரை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
4 வீடுகள்
சோழவந்தான் பகுதியில் பெய்த கனமழையால் இப்பகுதியில் உள்ள வீட்டின் சுவர்கள் இடிந்து விழுந்து சேதம் அடைந்து உள்ளது. ஒட்டுப்பச்சேரியில் உள்ள ஆயிஷா என்பவருடைய ஓட்டு வீட்டின் மண்சுவர் பகுதியளவு இடிந்து விழுந்து விட்டது. சப்பானி கோவில் தெருவைச் சேர்ந்த பாஸ்கரன் ஓட்டு வீடு மேற்கூரை இடிந்து விழுந்து உள்ளது. சி.புதூர் கிராமத்தில் வசித்துவரும் ராமன் வீடு கிழக்கு பக்க சுவர் இடிந்து விழுந்தது. நாச்சிகுளம் கிராமத்தில் பெய்த மழையின் காரணமாக சவுந்தரராஜன் வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்து விட்டது இதுகுறித்து வருவாய்த்துறையினர், ஊராட்சி நிர்வாகத்தினர் கணக்கெடுத்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்