ஆயுதங்களால் தாக்கி டாஸ்மாக் விற்பனையாளரிடம் பணம் பறிக்க முயன்ற 3 பேர் கைது

ஆயுதங்களால் தாக்கி டாஸ்மாக் விற்பனையாளரிடம் பணம் பறிக்க முயன்ற 3 பேர் கைது

Update: 2021-11-28 16:50 GMT
கணபதி

கோவை அருகே ஆயுதங்களால் தாக்கி டாஸ்மாக் விற்பனை யாளரிடம் பணம் பறிக்க முயன்ற வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

டாஸ்மாக் விற்பனையாளர் 

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் சிதம்பரம் (வயது 44). இவர் கோவை கணபதி கஸ்தூரிபாய் வீதியில் தங்கியிருந்து இடிகரையில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். 

இவர் கடந்த 13-ந் தேதி வேலை முடிந்து கடையை மூடிவிட்டு தனது ஸ்கூட்டரில் சின்னவேடம்பட்டி அருகே உள்ள  சின்ன மேட்டுப்பாளையம் பகுதியில் வந்து கொண்டிருந்தார். 

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் சிதம்பரத்தை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியது. அவரிடம் பணம் இல்லை என்பதால் அந்த கும்பல் அவரை ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பிச்சென்றது. இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். 

போலீசார் சோதனை 

அத்துடன் அந்த கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப் பட்டது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சின்னமேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து கீரணத்தம் ஐ.டி.பார்க் செல்லும் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் அதிவேகமாக வந்தனர். அவர்களை தனிப்படையினர் தடுத்து நிறுத்தினார்கள். அப்போது அவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் அங்கி ருந்து தப்பிச்செல்ல முயன்றனர். உடனே போலீசார் 3 பேரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினார்கள். 

3 பேர் கைது 

அதில் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த இசக்கிபாண்டி (23), நெல்லை அருகே உள்ள மேலக்காடுபட்டியை சேர்ந்த வானுபாண்டி (20) மற்றும் சின்னமேட்டுப்பாளையம் அக்கம்மாள் காலனியைச் சேர்ந்த இசக்கிமுத்து (21) என்பது தெரியவந்தது. 

தொடர் விசாரணையில் டாஸ்மாக் விற்பனையாளர் சிதம்பரத்தை ஆயுதங்களால் வெட்டி பணம் பறிக்க முயன்ற வழக்கில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரிந்தது. 

அத்துடன் அவர்கள் மீது பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருப்பதும், அத்துடன் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளில் அரிவாள், கத்தி, வீச்சரிவாள் போன்ற கூர்மையான ஆயுதங்களும் இருந்தன. உடனே போலீசார் அந்த 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்