தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்

கேர்மாளம் அருகே தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்ததில் மக்காச்சோள பயிர் நாசம் ஆனது.

Update: 2021-11-29 15:26 GMT
கேர்மாளம் அருகே தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்ததில் மக்காச்சோள பயிர் நாசம் ஆனது.
 10 வனச்சரகங்கள்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, கேர்மாளம், ஆசனூர் உள்பட 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, செந்நாய், மான் போன்ற  வனவிலங்குகள் வசித்து வருகின்றன. 
இதில் யானைகள் அடிக்கடி காட்டை விட்டு வெளியேறி வனப்பகுதியையொட்டி உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து கரும்பு, வாழை, மக்காச்சோளம் போன்ற பயிர்களை நாசம் செய்து வருகிறது.
3 யானைகள்
இதேபோன்ற சம்பவம் கேர்மாளம் வனச்சரகத்துக்கு உள்பட்ட பகுதியில் நடைபெற்று உள்ளது. 
கேர்மாளம் வனச்சரகத்துக்கு உள்பட்ட போடர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சோமு (வயது 50). இவர் தனது 5 ஏக்கர் விவசாய நிலத்தில் மக்காச்சோள பயிர் பயிரிட்டு இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் வனப்பகுதியில் இருந்து 3 காட்டு யானைகள் வெளியேறி உள்ளன. பின்னர் அந்த யானைகள் சோமுவின் மக்காச்சோள தோட்டத்துக்குள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோள பயிரை தின்றும், மிதித்தும் நாசப்படுத்தின. அப்போது தோட்டத்தில் காவலுக்காக இருந்த சோமு, திடீரென யானைகள் புகுந்து மக்காச்சோள பயிரை நாசம் செய்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 
மக்காச்சோள பயிர் நாசம்
உடனே அவர் அருகில் உள்ள விவசாயிகளுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து யானைகளை பட்டாசு வெடித்தும், தகர டப்பாவால் ஒலி எழுப்பியும் விவசாயிகள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் யானைகள் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றன. 
தோட்டத்துக்குள் யானைகள் புகுந்து அட்டகாசம் செய்ததில், 1 ஏக்கர் பரப்பளவிலான மக்காச்சோள பயிர் நாசம் ஆனது.
வனப்பகுதியை விட்டு யானைகள் வெளியேறி விவசாய நிலங்களுக்குள் புகுவதை தடுக்க அகழி அமைக்க வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

மேலும் செய்திகள்