ரூ.10 கோடி மதிப்புள்ள சொத்துகள் மீட்பு
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்புள்ள சொத்துகள் மீட்கப்பட்டன.;
மதுரை,
மதுரை பை-பாஸ் ரோடு பொன்மேனி காளிமுத்து நகர் பகுதியில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடம் இருப்பது தெரியவந்தது. உடனே அப்போது இருந்த இணை கமிஷனர் நடராஜன் அது குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது சுமார் 2 ஏக்கர் கோவில் நிலத்தில் பல மாடி கட்டிடம் கட்டி சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் பலர் ஆக்கிரமித்து வசித்து வருவது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.10 கோடி என்பது தெரியவந்தது.
இது குறித்து கோவில் நிர்வாகம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில் அந்த இடத்தை கோவில் நிர்வாகம் கையகப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. அதை தொடர்ந்து தற்போதுள்ள கோவில் இணை கமிஷனர் செல்லத்துரை தலைமையிலான கோவில் அலுவலர்கள் நேற்று காலை சம்பவ இடத்திற்கு சென்றனர்.
அங்கு கோவில் நிலத்தில் ஆக்கிரமித்து உள்ளவர்களை கோர்ட்டு உத்தரவை காண்பித்து அங்கிருந்து உடனே செல்லுமாறு தெரிவித்தனர். இதையொட்டி அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். பின்னர் ஆக்கிரமித்துள்ள இடத்தில் கட்டியுள்ள பல மாடி கட்டிடத்தை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து தள்ளி அப்புறப்படுத்தினர்.. பின்னர் இடத்தை முழுவதும் கோவில் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து அங்கு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.