21 மாதங்களுக்கு பிறகு கேரளாவிற்கு பஸ் போக்குவரத்து தொடக்கம்

21 மாதங்களுக்கு பிறகு கேரளாவிற்கு பஸ் போக்குவரத்து தொடக்கம்;

Update:2021-12-01 21:22 IST
பொள்ளாச்சி

21 மாதங்களுக்கு பிறகு கேரளாவிற்கு பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கையை கடைபிடிக்க அறிவுரை வழங்கப்பட்டது.

கேரளாவுக்கு பஸ் போக்குவரத்து

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் அந்த மாதம் 21-ந் தேதி முதல் பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 

பின்னர் ஊரடங்கில் தளர்வுகள் ஏற்பட்டு பஸ் போக்குவரத்து தொடங்கினாலும் கேரளாவுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. இங்கிருந்து இயக்கப்பட்ட பஸ்கள் தமிழக-கேரளா வரை சென்று வந்தன. இந்த நிலையில் 21 மாதங்களுக்கு பிறகு நேற்று முதல் கேரளாவுக்கு பஸ் போக்குவரத்து தொடங்கியது. 

அதிகாரிகள் ஆய்வு 

பொள்ளாச்சி புதிய பஸ் நிலையத்தில் இருந்து கேரளா மாநிலம் பாலக்காடு, திருச்சூர், குருவாயூர், தத்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தமிழக-கேரள அரசு பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன. 

இதையடுத்து அதிகாரிகள் பஸ்களில் ஆய்வு மேற்கொண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினர். இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-

பாதுகாப்பு வழிமுறைகள்

பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு 10 அரசு பஸ்களும்,  அங்கிருந்து பொள்ளாச்சிக்கு 10 கேரள அரசு பஸ்களும் இயக்கப் பட்டன. மேலும் பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு 3 தனியார் பஸ்கள் இயக்கப்பட்டதில் தற்போது ஒரு பஸ் மட்டும் இயக்கப்படுகிறது. 

டிரைவர், கண்டக்டர் மற்றும் பயணிகள் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். பஸ்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். பஸ்சில் வரும் பயணிகள் யாருக்காது சளி, இருமல், காய்ச்சல் போன்ற தொந்தரவுகள் இருந்தால் உடனே தகவல் தெரிவிக்க வேண்டும்.

 கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். விதிமுறை களை மீறும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்