ஈரோடு மாணிக்கம்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கூடம் முன்பு அமர்ந்து பெற்றோர்கள் தர்ணா; விளையாட்டு மைதானத்தை திறக்கக்கோரி நடந்தது

ஈரோடு மாணிக்கம்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கூடத்தின் விளையாட்டு மைதானத்தை திறக்கக்கோரி பள்ளிக்கூடம் முன்பு அமர்ந்து பெற்றோர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update:2021-12-03 01:52 IST
ஈரோடு
ஈரோடு மாணிக்கம்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கூடத்தின் விளையாட்டு மைதானத்தை திறக்கக்கோரி பள்ளிக்கூடம் முன்பு அமர்ந்து பெற்றோர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்ணா
ஈரோடு மாணிக்கம்பாளையம் வீட்டு வசதி வாரியம் பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கூடத்தில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை 969 மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளிக்கூடத்துக்கு சொந்தமான விளையாட்டு மைதானம் பள்ளிக்கூடத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் உள்ளது.
இந்த மைதானத்தில் பள்ளிக்கூடத்தின் மாணவர்கள் சிலர் கைப்பந்து விளையாடி வந்துள்ளனர். இந்த நிலையில் பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியர், கைப்பந்து விளையாடிய மாணவர்களை கண்டித்து, மாணவர்கள் யாரும் விளையாடாதபடி மைதானத்தை பூட்டு போட்டுவிட்டதாக கூறி மாணவர்களின் பெற்றோர்கள் நேற்று மாலை பள்ளிக்கூடத்தின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கைப்பந்து விளையாட அனுமதி
இதுபற்றிய தகவல் அறிந்ததும், ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் மற்றும் பள்ளிக்கல்வித்துறை உதவி ஆய்வாளர் பால்ராஜ் ஆகியோர், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் பெற்றோர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது மாணவர்களின் பெற்றோர்கள் கூறியதாவது:-
இந்த பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவர்கள் தேசிய, மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளனர். தற்போது பள்ளிக்கூடத்தின் மைதானத்தை திறக்காததால் மாணவர்கள் பயிற்சி மேற்கொள்ள முடியவில்லை. இதுகுறித்து தலைமை ஆசிரியரிடம் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே பள்ளிக்கூட மைதானத்தை திறந்து, மாணவர்கள் கைப்பந்து விளையாட அனுமதி அளிக்க வேண்டும்’ என்றனர்.
இதற்கு அதிகாரிகள், ‘இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி, இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும்’ என தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்