ஈரோடு மாநகர் பகுதியில் 58 மில்லி மீட்டர் மழை பதிவு; சேறும், சகதியுமாக மாறிய நேதாஜி காய்கறி மார்க்கெட்
ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று முன்தினம் 58 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதன் காரணமாக நேதாஜி காய்கறி மார்க்கெட் சேறும், சகதியுமாக மாறியது.;
ஈரோடு
ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று முன்தினம் 58 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதன் காரணமாக நேதாஜி காய்கறி மார்க்கெட் சேறும், சகதியுமாக மாறியது.
மழை
ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று முன்தினம் மாலை 5.45 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை விட்டுவிட்டு பெய்தது. குறிப்பாக இரவு 10 மணி முதல் 10.45 மணி வரை சுமார் 45 நிமிடங்கள் மழை வெளுத்து வாங்கியது. இதனால் மாநகர் பகுதியில் பல்வேறு இடங்களிலும், பெரும்பள்ளம் ஓடை மற்றும் பிச்சைக்காரன் பள்ளம் ஓடையிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி நின்றது. மேலும் பல்வேறு பணிகளுக்காக தோண்டப்பட்ட ரோடுகள் குண்டும், குழியுமாக காணப்படுவதால் ரோட்டில் மழை நீர் தேங்கி நின்றது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.
சேறும், சகதியுமாக...
மேலும் நேற்று முன்தினம் இரவு பெய்த மழை காரணமாக ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் இயங்கி வரும் நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் சேறும், சகதியுமாக மாறியது. இதனால் நேற்று காலை காய்கறிகள் வாங்க வந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பெரிதும் சிரமப்பட்டனர். அங்கு தண்ணீர் தேங்காத வகையில் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர். மழைகாரணமாக வைராபாளையம் பகுதியில் நெல்பயிர்கள் சாய்ந்து கிடந்தன.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை பதிவான மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
ஈரோடு - 58, குண்டேரிப்பள்ளம் - 17, கவுந்தப்பாடி - 15.2, நம்பியூர் - 12, சத்தியமங்கலம் - 10, பவானி - 5.2, அம்மாபேட்டை - 5.2, கொடிவேரி அணை - 4.2, கோபி - 2, வரட்டுப்பள்ளம் - 2. அதிகபட்சமாக ஈரோடு மாநகர் பகுதியில் 58 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது.