பெருந்துறையில் பட்டப்பகலில் வீடு புகுந்து துணிகரம்: கத்திமுனையில் பெண்ணிடம் 11 பவுன் நகை- பணம் பறிப்பு; மர்மநபருக்கு வலைவீச்சு

பெருந்துறையில் வீடு புகுந்து கத்தி முனையில் பெண்ணிடம் 11 பவுன் நகை மற்றும் பணத்தை பறித்துச்சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகிறார்கள்.;

Update:2021-12-04 01:55 IST
பெருந்துறை
பெருந்துறையில் வீடு புகுந்து கத்தி முனையில் பெண்ணிடம் 11 பவுன் நகை மற்றும் பணத்தை பறித்துச்சென்ற  மர்மநபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
பட்டப்பகலில் நடைபெற்ற இந்த துணிகர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ஜவுளி வியாபாரி
பெருந்துறை கொங்கு நகர் வள்ளலார் வீதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 40). ஜவுளி வியாபாரி. இவருடைய மனைவி மல்லிகா (33). இவர்களுடைய மகன்கள் சபரி (13), நவீன் (9). 
வியாபாரம் தொடர்பாக கார்த்திக் நேற்று வெளியூர் சென்றுவிட்டார். 2 மகன்களும் காலையில் பள்ளிக்கு சென்றுவிட்டனர். இதனால் வீட்டில் மல்லிகா மட்டும் தனியாக இருந்தார். 
நகை- பணம்
அப்போது முன்புற கதவை உள்புறமாக தாழிட்டு கொள்ளாமல் வீட்டின் உள்ளே மல்லிகா உட்கார்ந்திருந்தார். காலை 9 மணி அளவில் மல்லிகா  வீட்டுக்கு மோட்டார்சைக்கிளில் மர்ம நபர் ஒருவர் வந்தார். உடனே அவர் நைசாக முன்புற கதவை திறந்து வீட்டின் உள்ளே சென்றார். உள்ளே சென்றதும், அங்கு மல்லிகா தனியாக இருந்ததை பார்த்தார்.
உடனே மர்ம நபர் தன்னிடம் இருந்த கத்தியை காட்டி மிரட்டி மல்லிகா கழுத்தில், காதில் அணிந்திருந்த தங்க சங்கிலி, கம்மல் என மொத்தம் 11 பவுன் நகைகளை பறித்துக்கொண்டார். மேலும் வீட்டில் இருந்த பீரோவை திறக்க சொல்லி அதற்குள் வைக்கப்பட்டிருந்த ரூ.3 லட்சத்தையும் எடுத்துக்கொண்டார். 
போலீசார் விசாரணை
பின்னர் மல்லிகாவை பார்த்து சத்தம் எதுவும் போடக்கூடாது என மீண்டும் கத்தியை காட்டி மிரட்டி விட்டு வீட்டைவிட்டு வெளியேறிய அந்த மர்ம நபர், அங்கு அவர் நிறுத்தியிருந்த மோட்டார்சைக்கிளில் ஏறி மின்னல் வேகத்தில் தப்பிச்சென்று விட்டார். 
இதுபற்றிய தகவல் அறிந்ததும் பெருந்துறை உதவி போலீஸ் சூப்பிரண்டு கவுதம் கோயல், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சண்முகசுந்தரம், சப்- இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்தனர்.
பரபரப்பு
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் பணத்தை பறித்து சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள். 
பட்டப்பகலில் வீடு புகுந்து பெண்ணிடம் நகை மற்றும் பணத்தை மர்ம நபர் பறித்து சென்ற சம்பவம் பெருந்துறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்