ஊரப்பாக்கத்தில் பள்ளம் ஏற்பட்ட வீட்டின் பின்புற கால்வாயை அகலப்படுத்த நடவடிக்கை - கலெக்டர் பேட்டி

ஊரப்பாக்கத்தில் பள்ளம் ஏற்பட்ட வீட்டின் பின்புறம் செல்லும் அடையாறு கால்வாயை அகலப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.

Update: 2021-12-04 09:21 GMT
வண்டலூர்,

வடகிழக்கு பருவமழையின் காரணமாக கடந்த மாதம் செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர் மழை பெய்தது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள் நிரம்பியது. உபரிநீர் தொடர்ந்து வெளியேறி கொண்டிருக்கிறது.

இதேபோல் நந்திவரம், ஊரப்பாக்கம் ஆகிய ஏரிகளும் முழு கொள்ளளவை எட்டியது. அதனுடைய உபரிநீர் ஊரப்பாக்கம் ஜெகதீஷ் நகர் வழியாக அடையாறு கால்வாயில் செல்கிறது.

இதற்கிடையே கடந்த மாதம் 30-ந் தேதி ஊரப்பாக்கம் ஜெகதீஷ் நகரை சேர்ந்த குணசேகரன் என்பவரது வீட்டில் பள்ளம் ஏற்பட்டது. அதன் வழியாக ஒரு புறத்திலிருந்து மறுபுறத்திற்கு வெள்ளம் ஓடுகிறது. இதனையடுத்து அந்த அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த குடும்பத்தினர் அங்கிருந்து வெளியேறினர்.

இந்தநிலையில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் உள்வாங்கிய வீட்டையும், அந்த வீட்டின் பின்புறமாக செல்லும் அடையாறு கால்வாய் பகுதியை ஆய்வு செய்தார். இந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த குடியிருப்புவாசிகள் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர்.

பின்னர் மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் நிருபர்களிடம் கூறியதாவது:-

தரை உள்வாங்கிய வீட்டின் பின்புறமாக செல்லும் கால்வாய் பட்டா இடத்தில் உள்ளது. எனவே பட்டாதாரர்களிடம் பேசி கால்வாயை அகலப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

தற்போது கால்வாயில் தண்ணீர் வேகமாக செல்கிறது, தண்ணீர் வேகம் குறைந்தவுடன் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் தரை உள்வாங்கிய வீட்டின் பக்கத்தில் உள்ள வீடுகளையும் ஆய்வு செய்வதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும் நந்திவரம், ஊரப்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் அனைத்தும் ஒரே கால்வாய் வழியாக செல்கிறது. எனவே இனிவரும் காலங்களில் 2 புதிய கால்வாய்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் கால்வாயை ஒட்டியுள்ள குடியிருப்புவாசிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் கூறினார்.

அவருடன் தாம்பரம் வருவாய் ஆர்.டி.ஓ. அறிவுடை நம்பி, செங்கல்பட்டு எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன், வண்டலூர் தாசில்தார் ஆறுமுகம், மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்