மொடக்குறிச்சி தாசில்தார் அலுவலகத்தில் பரபரப்பு: கிராம நிர்வாக அதிகாரிகள் உள்ளிருப்பு போராட்டம்

மொடக்குறிச்சி தாசில்தார் அலுவலகத்தில் கிராம நிர்வாக அதிகாரிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.;

Update:2021-12-08 02:43 IST
மொடக்குறிச்சி
மொடக்குறிச்சி தாசில்தார் அலுவலகத்தில் கிராம நிர்வாக அதிகாரிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். 
கிராம நிர்வாக அதிகாரி
மொடக்குறிச்சி அருகே உள்ள அவல்பூந்துறை ஆ கிராமத்தில், கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் பொன்னர் (வயது 37). பள்ளியூத்து பெரியகாட்டு தோட்டத்தைச் சேர்ந்தவர் சிவசபாபதி. விவசாயி. இவர் பயிர்க்கடன் சான்றிதழ் பெறுவதற்காக கிராம நிர்வாக அதிகாரி பொன்னரை அனுகியுள்ளார். 
அப்போது சிவசபாபதியின் தோட்டம் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பது தெரியவந்தது. இதனால் வழக்கு முடிந்தால்தான் சான்றிதழ் வழங்க முடியும் என்று பொன்னர் கூறியுள்ளார்.
உள்ளிருப்பு போராட்டம்
இதையடுத்து பொன்னரை, சிவசபாபதி செல்போனில் தொடர்பு கொண்டு  திட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பொன்னர் அறச்சலூர் போலீசில் புகார் அளித்தார். 
புகார் அளித்த பின்னர் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் சிவசபாபதி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மொடக்குறிச்சி தாசில்தார் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் நேற்று காலை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
 15 நாட்களில் கைது
இந்தநிலையில் ஆர்.டி.ஓ. பிரேமலதா தாசில்தார் அலுவலகத்துக்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த கிராம நிர்வாக அதிகாரிகளிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். அதற்கு அவர்கள், சிவசபாபதியை கைது செய்யும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று கூறினார்கள். 
இதையடுத்து, மதியம் 3 மணி அளவில் ஆர்.டி.ஓ. பிரேமலதா மற்றும் அறச்சலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் போராட்டம் நடத்திய கிராம நிர்வாக அதிகாரிகளிடம் சிவசபாபதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் 15 நாட்களுக்குள் கைது செய்யப்படுவார் என்று உறுதி அளித்தார்கள். அதை ஏற்றுக்கொண்டு கிராம நிர்வாக அதிகாரிகள் போராட்டத்தை கைவிட்டார்கள்.

மேலும் செய்திகள்