புகார் பெட்டி

புகார் பெட்டி;

Update:2021-12-08 02:43 IST
குண்டும்-குழியுமான சாலை 
ஈரோடு காவிரி ரோடு ஒங்காளியம்மன் கோவிலில் இருந்து காலிங்கராயன் வாய்க்கால் அருகில் வரை ரோடு குண்டும்-குழியுமாக உள்ளது. ரோடு போடுவதற்காக ஜல்லிகள் கொண்டு வந்து கொட்டினார்கள். ஆனால் அதன் பின்னர் எந்த பணியும் நடைபெறவில்லை. தற்போது இந்த ரோடு நடந்து கூட செல்ல முடியாத நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இங்கு விரைந்து தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
அருள்மணி, கருங்கல்பாளையம், ஈரோடு.

மின்கம்பத்தை சுற்றிய செடிகள் 
ஈரோடு சோலார் போக்குவரத்து நகர் அருகில் ஒரு மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தை சுற்றி செடி கொடிகள் வளர்ந்துள்ளது. மின்கம்பம் முழுவதும் செடி, கொடிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மேலே வரை படர்ந்திருக்கும் செடி, கொடிகளை யாராவது தொட்டால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அதற்குள் மின்வாரிய அதிகாரிகள் கம்பத்தை சுற்றியுள்ள செடி, கொடிகளை அகற்ற வேண்டும்.
சேகர், சின்னியம்பாளையம்.

பஸ்வசதி வேண்டும்
அந்தியூரில் இருந்து கவுந்தப்பாடிக்கு செம்புளிச்சாம்பாளையம், காட்டுப்பாளையம், பிரம்மதேசம், ஓசைப்பட்டி, ஆப்பக்கூடல், ஒரிச்சேரி, தளவாய்பேட்டை, வைரமங்கலம், குட்டிபாளையம், பெருந்தலையூர், மேட்டுப்பாளையம் வழியாக முறையான பஸ் வசதி இல்லை. இதனால் அப்பகுதி மக்கள் கூலி வேலை மற்றும் பல்வேறு தேவைகளுக்கு செல்ல பஸ் வசதி இல்லாமல் தவிக்கிறார்கள். சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் அந்தியூரில் இருந்து கவுந்தப்பாடிக்கு மேற்கண்ட ஊர்கள் வழியாக பஸ் விடுவார்களா?
பொதுமக்கள், பெருந்தலையூர்.
பாதையில் தேங்கும் கழிவுநீர்
ஈரோடு மாநகராட்சி 13-வது வார்டில் பம்பிங் ஸ்டேசன் ரோடு 3-வது வீதியில் 2 மாதமாக பாதாள சாக்கடை கழிவுநீர் வீதியில் சென்று கொண்டிருக்கிறது. இதுபற்றி அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்றும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. குடியிருப்பு அருகே கழிவு நீர் தேங்கியிருப்பதால் பொதுமக்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் வர வாய்ப்பு உள்ளது. எனவே இனியாவது அதிகாரிகள் பாதையில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், ஈரோடு.
தடுமாற வைக்கும் நுழைவு பாலம்
ஈரோடு வெண்டிபாளையத்தில் ரெயில் பாதையின் கீழ் சில மாதங்களுக்கு முன் நுழைவு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. நாள்தோறும் ஏராளமானோர் இந்த பாதை வழியாக வாகனங்களில் சென்று வருகிறார்கள். ஆனால் நுழைவு பாலத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள ரோட்டில் தார்போடவில்லை. சிமெண்டு கான்கிரீட் பெயர்ந்து ஜல்லிகள் வெளியே தெரிகின்றன. இதனால் வாகனங்களில் செல்பவர்கள் தட்டுத்தடுமாறி அவதிப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அங்கு தார்ரோடோ? அல்லது சிமெண்டு ரோடோ? போடவேண்டும்.
நாராயணமூர்த்தி, வெண்டிபாளையம். 
கோரிக்கை ஏற்பு
ஈரோடு திண்டல் பாலாஜி கார்டன் பகுதியில் சாக்கடை தூர்வாரப்படாமல் இருந்தது. இதனால் அந்த பகுதியில் கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசியது. எனவே சாக்கடையை தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர். இதுதொடர்பான செய்தி தினத்தந்தி புகார் பெட்டியிலும் வெளிவந்தது. இதையடுத்து சாக்கடை தூர்வாரப்பட்டது. எனவே நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு உதவிய தினத்தந்தி நாளிதழுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
பொதுமக்கள், பாலாஜி கார்டன்.
பாராட்டு
ஈரோடு பெரியசேமூர் எஸ்.எஸ்.பி.நகரில் குடிநீர் தட்டுப்பாடு நிலவியது. அங்கு வாரத்துக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இதுபற்றிய செய்தி தினத்தந்தி புகார் பெட்டியில் வெளிவந்தது. இதன் எதிரொலியாக தற்போது ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் வருகிறது. எனவே நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு உதவிய தினத்தந்தி நாளிதழுக்கும் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம்.
அ.தமிழ்குமரன், ஈரோடு.


மேலும் செய்திகள்