நடந்து சென்று கொண்டிருந்த மூதாட்டியை தாக்கி 3 பவுன் நகை பறிப்பு- மர்மநபர்கள் 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

ஈரோடு அருகே நடந்து சென்று கொண்டிருந்த மூதாட்டியை தாக்கி 3 பவுன் நகையை பறித்துவிட்டு தப்பித்து சென்ற மர்மநபர்கள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.;

Update:2021-12-10 01:47 IST
ஈரோடு
ஈரோடு அருகே நடந்து சென்று கொண்டிருந்த மூதாட்டியை தாக்கி 3 பவுன் நகையை பறித்துவிட்டு தப்பித்து சென்ற மர்மநபர்கள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
நகை பறிப்பு
ஈரோடு கரூர் ரோடு இரணியன் வீதி பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவருடைய மனைவி சரோஜா (வயது 63) இவருடைய மருமகன் சோலார் பகுதியில் உணவகம் வைத்து நடத்தி வருகிறார். இந்த உணவகத்திற்கு சரோஜா தினமும் சென்று வேலை செய்து வந்தார். அதன்படி நேற்று அதிகாலை 5 மணி அளவில் உணவகத்திற்கு செல்வதற்காக சரோஜா நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் அவரை பின் தொடர்ந்து சென்றனர். ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சென்ற போது, திடீரென சரோஜாவை கீழே தள்ளிவிட்டு அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் மர்ம நபர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
2 பேருக்கு வலைவீச்சு
இதுகுறித்த புகாரின் பேரில் ஈரோடு தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரில் ஒருவர் தலையில் குல்லா வைத்திருந்த காட்சி அதில் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, மூதாட்டியிடம் நகையை பறித்துச்சென்ற மர்ம நபர்கள் 2 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்