பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் 2 வாலிபர்கள் கைது

பவானி அருகே பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.;

Update:2021-12-11 02:30 IST
பவானி
பவானி அருகே பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
நகை பறிப்பு
பவானியை அடுத்த சித்தோடு கங்காபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பவித்ரா (வயது 31). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரிந்து வருகிறார்.
பவித்ரா கடந்த மாதம் 23-ந் தேதி பணியை முடித்து விட்டு மாலை 6.30 மணி அளவில் மொபட்டில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கங்காபுரம்   அருகே  சென்றபோது பின்னால் மோட்டார்சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர் திடீரென பவித்ராவின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து விட்டு தப்பித்து சென்றனர்.
விசாரணை
இதுகுறித்து பவித்ரா சித்தோடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். 
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ நடந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வந்தனர்,
இந்த நிலையில் நேற்று முன்தினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் வடிவேல் குமார், முருகையா தலைமையிலான தனிப்படை போலீசார் பெருந்துறை அருகே பைபாஸ் சாலையில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக நடந்து வந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.
2 வாலிபர்கள் கைது
விசாரணையில் அவர்கள் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில்  பகுதியைச் சேர்ந்த மணவாளன் (21) என்பதும், மற்றொருவர் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த பாலசிங்கம் (26) என்பதும், இவர்கள் 2 பேரும் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு சிறையில் இருந்தபோது நண்பர்களானதும், பின்னர் வெளியே வந்து கூட்டு சேர்ந்து வழிப்பறி மற்றும் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததையும், கடந்த மாதம் 23-ந் தேதி கங்காபுரம் அருகே மொபட்டில் சென்று கொண்டிருந்த பவித்ராவிடம் நகையை பறித்ததையும் ஒப்புக்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். 
மேலும் அவர்களிடம் இருந்து 3 பவுன் தங்கச்சங்கிலி பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 2 பேரும் ஈரோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 3-ல் ஆஜர்படுத்தப்பட்டு், கோபிசெட்டிபாளையம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்