4 வருடத்துக்கு முன்பு மாயமான கர்நாடக வாலிபரை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைப்பு

உதவும் கரங்கள் அமைப்பு மூலம் 4 வருடத்துக்கு முன்பு மாயமான கர்நாடக வாலிபர் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.;

Update:2021-12-12 15:51 IST
சென்னை அம்பத்தூர் தபால் நிலையம் அருகே மனநிலை பாதிக்கப்பட்டு, ஆதரவற்ற நிலையில் வாலிபர் ஒருவர் சுற்றித்திரிந்ததை உதவும் கரங்கள் அமைப்பை சேர்ந்த சமூக ஆர்வலரான ஜேக்கப் பார்த்தார். இதுதொடர்பாக உதவும் கரங்கள் அமைப்பின் நிறுவனர் வித்யாகருக்கு, அந்த வாலிபரின் புகைப்படத்தை அனுப்பி தகவல் தெரிவித்தார். அந்த வாலிபரை திருவேற்காடில் உள்ள இல்லத்துக்கு அழைத்துச்சென்று, அங்கு அவருக்கு உளவியல் ரீதியாக சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதன்பிறகு நடத்திய விசாரணையில், அந்த வாலிபர் கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தைச் சேர்ந்த தாவூத்-அர்ஷிதா பானு தம்பதிகளின் மகன் முகமது பைசல் (வயது 24) என்பதும், 16 வயதில் இருந்தே மனநிலை பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்ததும், 4 வருடங்களுக்கு முன்பு அதாவது, 2017-ம் ஆண்டு குடும்பத்தினரிடம் சண்டை போட்டுவிட்டு, கோவாவுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றதும் தெரியவந்தது. பின்னர் அவரை குடும்பத்தினரால் தொடர்புகொள்ளமுடியவில்லை. முகமது பைசல் மீட்கப்பட்டது தொடர்பாக தாவூத்-அர்ஷிதா பானு தம்பதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருந்த தாவூத்-அர்ஷிதா பானு ஆகியோருக்கு மாயமான தங்களுடைய மகன் மீண்டும் கிடைத்தது அளவில்லா மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 2 பேரும் உடனடியாக சென்னை புறப்பட்டு வந்தனர். அவர்களிடம் முகமது பைசல் ஒப்படைக்கப்பட்டார். காணாமல் போன தங்களுடைய மகனை மீட்டு கொடுத்த, உதவும் கரங்கள் அமைப்புக்கு தாவூத்- அர்ஷிதா பானு தம்பதி நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்