பள்ளிப்பட்டு நகரத்தில் அதிக பாரம் ஏற்றி வந்த கரும்பு வாகனத்தால் போக்குவரத்து நெரிசல்

பள்ளிப்பட்டில் அதிக பாரம் ஏற்றி வந்த கரும்பு வாகனத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Update: 2021-12-13 16:23 GMT
சர்க்கரை ஆலை

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே ஆந்திர மாநிலம் நெலவாய் என்ற இடத்தில் தனியார் சர்க்கரை ஆலை உள்ளது. இந்த சர்க்கரை ஆலைக்கு பள்ளிப்பட்டு ஒன்றியத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து கரும்பு விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட கரும்புகளை வாகனங்கள் மூலம் தனியார் சர்க்கரை ஆலைக்கு அனுப்பி வைக்கின்றனர். இப்படி செல்லும் கரும்பு வாகனங்களில் பெரும்பாலான வாகனங்கள் பள்ளிப்பட்டு நகருக்குள் நுழைந்து பிரதான சாலைகள் வழியாக செல்கின்றன.

இதில், வாகனத்தின் தரத்திற்கு தகுந்தார்போல் பாரத்தை ஏற்றாமல் அதிக அளவு கரும்பை ஏற்றிச் செல்வதால் பள்ளிப்பட்டு நகரின் பிரதான சாலைகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

போக்குவரத்து நெரிசல்

இந்தநிலையில் நேற்று காலை 10 மணி அளவில் அதிக பாரத்துடன் ஒரு கரும்பு வாகனம் பள்ளிப்பட்டு நகருக்குள் நுழைந்தது. அப்போது மெயின் ரோட்டில் பழைய போலீஸ் நிலையம் முன்பு சென்ற வாகனம் எதிரே வந்த லாரியை கடக்க முடியாமல் சிக்கிக் கொண்டது.

இதனால் இந்த கரும்பு வாகனத்தின் முன்னும் பின்னும் ஏராளமான இருசக்கர வாகனங்களும், கார்களும், பஸ்களும் மேற்கொண்டு நகர முடியாமல் அணிவகுத்து நின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதிக பாரத்தை ஏற்றி வரும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து முறைப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

மேலும் செய்திகள்