டி.என்.டி. சாதி சான்றிதழ் கேட்டு ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு டி.என்.டி. (சீர்மரபினர்) சான்றிதழ் கேட்டு விடுதலைக்களம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-12-13 16:28 GMT
திண்டுக்கல்: 


குறைதீர்க்கும் கூட்டம் 
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், கலெக்டர் விசாகன் தலைமையில் நடைபெற்றது. இதில் கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் லதா உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த பொதுமக்கள் கோரிக்கைகள் குறித்து மனு கொடுத்தனர்.
நத்தம் தாலுகா சின்னமுளையூர் கிராமத்தினர், தாங்கள் 40 ஆண்டுகளாக விவசாயம் செய்து வரும் நிலத்துக்கு பட்டா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மனு கொடுத்தனர். முள்ளிப்பாடியை அடுத்த பாறையூர் மக்கள், 60 ஆண்டுகள் பழமையான சவேரியார் ஆலயத்தை விரிவாக்கம் செய்வதற்கு அனுமதி கேட்டு மனு கொடுத்தனர்.

மாணவர் மரணத்துக்கு நீதி 
இதற்கிடையே எழுத்தாளர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், ராமநாதபுரம் கல்லூரி மாணவர் மணிகண்டன் மரணத்துக்கு நீதிகேட்டும் கலெக்டர் அலுவலகம் முன்பு இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட தலைவர் நாகராஜ், அமைப்பாளர் ராமச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதையடுத்து அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், மணிகண்டன் மரணத்துக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவரின் குடும்பத்துக்கு ரூ.5 கோடி இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். எழுத்தாளர் மாரிதாசை கைது செய்த தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறோம், என்று கூறப்பட்டு இருந்தது.

சாதி சான்று கேட்டு மனு
அதேபோல் விடுதலைக்களம் கட்சியினர் டி.என்.டி. சாதி சான்றிதழ் கேட்டு கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். மேலும் கலெக்டர் அலுவலகம் முன்பு சாதி சான்றிதழ் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் நிறுவன தலைவர் நாகராஜன், மாநில பொறுப்பாளர் செல்லபாண்டி, மாவட்ட பொறுப்பாளர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து அவர்கள், கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், திண்டுக்கல் மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொட்டிய நாயக்கர் சமுதாய மக்கள் வாழ்கின்றனர். தேசத்தின் விடுதலைக்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட இவர்கள் தற்போது கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் விவசாய தினக்கூலிகளாக இருக்கின்றனர். எனவே தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினருக்கு டி.என்.டி. (சீர்மரபினர்) என்று சான்றிதழ் வழங்க வேண்டும், என்று கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்