முதல் அலகில் பராமரிப்பு பணி: வடசென்னை அனல்மின் நிலையத்தில் ஒரு மாதம் மின் உற்பத்தி நிறுத்தம்

மீஞ்சூர் அருகே வடசென்னை அனல்மின் நிலையத்தில் முதல் அலகில் பராமரிப்பு பணிக்காக மின் உற்பத்தி 30 நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2021-12-15 10:23 GMT
மீஞ்சூர்,

மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு ஊராட்சியில் வடசென்னை அனல்மின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு முதல் யூனிட்டில் 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட்டும், 2-வது யூனிட்டில் 2 அலகுகளில் தலா 600 வீதம் 1,200 மெகாவாட் மின் உற்பத்தியும் செய்யப்படுகிறது.

இந்தநிலையில், மின் உற்பத்திக்காக நிலக்கரி எரிக்கப்படும் நிலையில் அதன் சாம்பல் கொதிகலன் மற்றும் சாம்பல் குழாய் மூலம் வெளியேற்றப்பட்டு சாம்பல் குளத்தில் சேமிக்கப்படுகிறது.

இதற்கிடையே முதல் யூனிட்டில் கழிவு சாம்பல் செல்லும் குழாயில் திடீரென அடைப்பு ஏற்பட்டுள்ளதால் புகைபோக்கி மூலம் சாம்பல் வான்வெளியை சென்று காற்றில் கலந்து தூசி பரவுகிறது.

எனவே, சாம்பல் காற்றில் பரவுவதை தடுக்கும் வகையில் சாம்பல் கழிவுகுழாய் பராமரிப்பு பணி நேற்று தொடங்கியது.

இதன் காரணமாக முதல் யூனிட்டின் முதல் அலகில் 210 மெகாவாட் மின் உற்பத்தியை அடுத்த 30 நாட்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது. இதன் பராமரிப்பு பணி முடிந்தவுடன் மீண்டும் மின் உற்பத்தி துவங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்