நடுரோட்டில் நின்ற பஸ்சால் போக்குவரத்து பாதிப்பு
சென்னிமலை பஸ் நிலையம் முன்பு நடுரோட்டில் நின்ற பஸ்சால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.;
சென்னிமலை பஸ் நிலையத்தில் தற்போது புதிதாக வணிக வளாகங்கள் மற்றும் நுழைவு வாயில் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் நுழையும் பகுதி தற்போது அடைக்கப்பட்டுள்ளதால் ஒரு வழியாகவே பஸ்கள் உள்ளே நுழைந்து அதன் வழியாகவே வெளியேறி செல்கிறது. மேலும் பல பஸ்கள் பஸ் நிலையத்திற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டு பயணிகளை ஏற்றி செல்கிறது. இதனால் சென்னிமலை பஸ் நிலைய பகுதி தற்போது போக்குவரத்து நெருக்கடியுடன் காணப்படுகிறது.
இந்தநிலையில் ஈரோட்டில் இருந்து சென்னிமலை பஸ் நிலையத்துக்கு பயணிகளுடன் நேற்று மாலை 11 ஏ என்ற அரசு டவுன் பஸ் வந்து நின்றது. பின்னர் பஸ்சில் இருந்து பயணிகள் இறங்கினார்கள். அதைத்தொடர்ந்து பஸ்சை திருப்புவதற்காக அதன் டிரைவர் பஸ்சை பின்னோக்கி எடுத்தார்.
பஸ்சின் என்ஜின் ஸ்டார்ட் ஆகாமல் இருந்ததால் பஸ் நிலையம் முன்பு உள்ள சென்னிமலை- காங்கேயம் ரோட்டின் நடுவே அரசு பஸ் நின்று கொண்டது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த பஸ்சில் இருந்த பயணிகளே பஸ்சை முன்னேயும், பின்னேயும் தள்ளினர். அதன்பின்னரே பஸ் ஸ்டார்ட் ஆனது. அதைத்தொடர்ந்து அந்த பஸ் சென்னிமலையில் இருந்து புறப்பட்டு ஈரோட்டுக்கு சென்றது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.