நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்ணில் தேர்ச்சி பெற்றதால் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
நீட்தேர்வில் குறைந்த மதிப்பெண்ணில் தேர்ச்சி பெற்றதால் மருத்துவ சீட்டு கிடைக்குமா? என்ற ஏக்கத்தில் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
நீட் தேர்வில் தேர்ச்சி
சென்னையை அடுத்த புழல் காவாங்கரை கண்ணப்பசாமி நகரைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவர், வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் சுஜித்(வயது 19). இவர், இரண்டு முறை நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெறவில்லை. இந்த முறை நீட் தேர்வு எழுதி, அதில் குறைந்த மதிப்பெண்ணில் தேர்ச்சி பெற்று விட்டார்.
இதனால் மருத்துவ படிப்பு படிக்க தனக்கு சீட் கிடைக்குமா? கிடைக்காதா? என்ற ஏக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
தூக்குப்போட்டு தற்கொலை
இதனால் விரக்தி அடைந்த சுஜித், நேற்று மதியம் அவருடைய தாயார் கடைக்கு சென்ற நேரத்தில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டுக்கு திரும்பி வந்த அவருடைய தாயார், தனது மகன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியில் அலறினார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த புழல் போலீசார், தூக்கில் தொங்கிய மாணவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர், மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.