கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசிப்பணி தொடக்கம்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின்கீழ் முதல் சுற்று கோமாரி நோய் தடுப்பூசிப்பணி தொடக்கப்பட்டுள்ளது.;
கால்நடைகளுக்கு ஏற்படும் தொற்று நோயான கோமாரி நோய் மூலம் விவசாயிகளுக்கு கால்நடைகளில் இறப்பும் பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது. பெரும்பான்மையாக கால்நடை உரிமையாளர்கள் சிறு, குறு விவசாயிகளாக உள்ளதால், கால்நடை இழப்பினால் ஏற்படக்கூடிய பொருளாதார இழப்பை தாங்க இயலாத நிலையில் உள்ளனர்.
எனவே, கால்நடைகளை தொற்று நோய்களிலிருந்து காப்பாற்றும் பொருட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி போடுதல் அவசியமாகிறது. எனவே, காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 1 லட்சத்து 69 ஆயிரம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின்கீழ் முதல் சுற்று கோமாரி நோய் தடுப்பூசிப்பணி தொடக்கப்பட்டுள்ளது. கால்நடை உரிமையாளர்கள் தங்களது பசுக்கள், எருமைகள் மற்றும் 4 மாதத்திற்கு மேற்பட்ட இளங்கன்றுகள் ஆகியவற்றுக்கு கோமாரி நோய் தடுப்பூசி தவறாது போட்டுக் கொள்ள கலெக்டர் அலுவலகம் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.