கூடுதல் விலைக்கு உரங்கள் விற்பனையா கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு
கூடுதல் விலைக்கு உரங்கள் விற்பனையா கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு;
கோவை
கோவையில் கூடுதல் விலைக்கு உரங்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட கலெக்டருக்கு புகார்கள் வந்தன. எனவே உரக்கடைகளில் ஆய்வு செய்ய வேளாண்மை துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் சமீரன் உத்தரவிட்டார். அதன்படி வேளாண்மை இணை இயக்குனர் சித்ரா தேவி தலைமையில் தனிப்படையினர் தொண்டாமுத்தூர், மேட்டுப் பாளையம், பொள்ளாச்சி, சூலூர், பேரூர், காரமடை உள்பட மாவட்டம் முழுவதும் உரக்கடைகளில் அதிரடி ஆய்வு செய்தனர்.
இதில் பழைய உர மூட்டைகள், உயர்த்தப்பட்ட விலைக்கு விற்பனை செய்யப்படுகிறதா?. நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதல் விலைக்கு உரங்கள் செய்யப்படுகிறதா? என்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இது குறித்து வேளாண்மை துறை அதிகாரிகள் கூறியதாவது:-
50 கிலோ பொட்டாஷ் மூட்டை கடந்த 8-ந் தேதிக்கு முன்பு வரை ரூ.1,040 -க்கு விற்றது. தற்போது அது ரூ.1,700 ஆகஉயர்த்தப்பட்டு உள்ளது. ஆனால் சிலர் பழைய உர மூட்டைகளை, தற்போது உள்ள புதிய உர மூட்டை விலைக்கு விற்பனை செய்வதாக புகார்கள் வந்தது. அதன்பேரில் உரக்கடைகளில் சோதனை நடத்தப்பட்டது.
யூரியா ஒரு மூட்டை ரூ.265, டி.ஏ.பி. ஒரு மூட்டை ரூ.1,700-க்கு விற்பனை செய்ய வேண்டும். அதை விட அதிக விலைக்கு உரங்களை விற்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது மாவட்டத்தில் 1,750 மெட்ரிக் டன் யூரியா, 970 மெட்ரிக் டன் டி.ஏ.பி., 882 மெட்ரிக் டன் பொட்டாஷ், 2,790 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ், 1,120 டன் சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் உரங்கள் கையிருப்பு உள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.