போக்குவரத்துக்கு இடையூறாக ஆக்கிரமித்து கட்டப்பட்ட 8 இறைச்சி கடைகள் இடித்து அகற்றம்; அந்தியூர் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை
அந்தியூர் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக ஆக்கிரமித்து கட்டப்பட்ட 8 இறைச்சி கடைகளை பேரூராட்சி நிர்வாகம் இடித்து அகற்றியது.;
அந்தியூர்
அந்தியூர் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக ஆக்கிரமித்து கட்டப்பட்ட 8 இறைச்சி கடைகளை பேரூராட்சி நிர்வாகம் இடித்து அகற்றியது.
ஆக்கிரமிப்பு
அந்தியூர் தவுட்டுபாளையத்தில் ஓடும் ஒரு ஓடை பாலம் அருகே உள்ள இடத்தை ஆக்கிரமித்து 8 இறைச்சி கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த கடைகளால் அந்த பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வந்தது. எனவே இந்த கடைகளை அகற்ற வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்துக்கு ஏராளமான புகார் மனு அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து ஓடை அருகே உள்ள பகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த இறைச்சி கடைகளை இடித்து அகற்ற சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் அளிக்கப்பட்டதாக தெரிகிறது.
இடித்து அகற்றம்
இந்த நிலையில் பேரூராட்சி செயல் அதிகாரி ரவி, சுகாதார ஆய்வாளர்கள் குணசேகரன், ஈஸ்வரமூர்த்தி மற்றும் பணியாளர்கள் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 8 இறைச்சி கடைகளை இடித்து அகற்றும் பணியில் நேற்று ஈடுபட்டனர். அப்போது கடை உரிமையாளர்கள் தங்களுடைய பொருட்களை எடுத்து பாதுகாப்பாக வைத்துக்கொண்டனர்.
பின்னர் அந்த பகுதியில் யாரும் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என்ற அறிவிப்பு பலகையும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்டது.