ஈரோட்டில் பிரபல கொள்ளையர்கள் 2 பேர் கைது
ஈரோட்டில் பிரபல கொள்ளையர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;
ஈரோடு
ஈரோட்டில் பிரபல கொள்ளையர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வாகன சோதனை
ஈரோடு கரூர் ரோடு இரணியன் வீதியை சேர்ந்தவர் நடராஜன். இவருடைய மனைவி சரோஜா (வயது 63). இவர் சம்பவத்தன்று அதிகாலை 5 மணி அளவில் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர், சரோஜாவை பின் தொடர்ந்து சென்றனர். பின்னர் அவரை கீழே தள்ளிவிட்டு அவருடைய கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
இதைத்தொடர்ந்து சரோஜா இதுபற்றி ஈரோடு தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்கள் 2 பேரையும் வலைவீசி தேடிவந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் சோலார் பிரிவில் தாலுகா போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
விசாரணை
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், கரூர் மாவட்டம் நல்லத்தாங்கல் ஓடை 2-வது குறுக்கு தெருவை சேர்ந்த வெற்றி முரசு (24), கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள டி.வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்த மகேந்திரன் (34) ஆகியோர் என்பது தெரியவந்தது.
மேலும் இவர்கள் 2 பேரும் சேர்ந்து தான், சோலார் அருகே ரோட்டில் நடந்து சென்ற சரோஜாவிடம் 3 பவுன் நகையை பறித்து சென்றதும், வழிப்பறி, மோட்டார் சைக்கிள் திருட்டு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு தலைறைவாக இருந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.
2 பேர் கைது
இதைத்தொடர்ந்து 2 பேரையும் தாலுகா போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர். இவர்களிடம் இருந்து போலீசார் 3 பவுன் நகையையும் மீட்டனர். கைது செய்யப்பட்ட 2 பேர் மீதும் ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
மகேந்திரன் மீது மட்டும் ஈரோடு, கரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் 31 வழக்குகளும், வெற்றிமுரசு மீது 9 வழக்குகளும் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.