வாலாஜாபாத் அருகே பாலாற்றில் அடித்து செல்லப்பட்ட ஊர்காவல் படைவீரர் பிணமாக மீட்பு

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே பாலாற்றில் அடித்து செல்லப்பட்ட ஊர்காவல் படைவீரர் 2 நாள் தீவிர தேடுதலுக்கு பிறகு பிணமாக மீட்கப்பட்டார்.;

Update:2021-12-21 19:21 IST
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்

காஞ்சீபுரம் ஓரிக்கை பகுதியை சேர்ந்தவர் ஜோதி. இவரது மகன் தரணிகுமார் (வயது 31). இவர் ஊர்காவல் படைவீரராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு அபிராமி என்ற மனைவி உள்ளார்.

இவர் கடந்த சனிக்கிழமை அன்று வாலாஜாபாத் அடுத்த திருமுக்கூடல் பகுதியில் உள்ள பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு, பாலாற்றில் நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார். அப்போது தீடீரென வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்.

பிணமாக மீட்பு

இதுகுறித்து அவரது நண்பர்கள் உடனடியாக தீயணைப்புத் துறைக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து தீயணைப்புத் துறையினர் கடந்த 2 நாட்களாக பாலாற்றில் படகு மூலம் தேடி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று தரணிகுமாரை பழையசீவரம் பாலாற்று தடுப்பணை அருகே தீயணைப்பு துறையினர் பிணமாக மீட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த சாலவாக்கம் போலீசார் தரணிகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்